நடப்பு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ரசிகர் கூட்டத்தை ஈர்த்திருப்பது வங்கதேசம் விளையாடும் வங்கதேச மைதானங்களே. ஆனால் வங்கதேசத்தின் இன்றைய ஆட்டம் அந்த ரசிகர்களின் உணர்வுகளை மதித்ததாக அமையவில்லை.
இன்றும் மிர்பூர் மைதானத்தில் இரவு உணவு வரை அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸ்டேடியத்திற்குள் தங்களது வீரர்களுக்கு உரத்த ஆதரவு அளிக்க பெரும் ரசிகர் கூட்டம் வந்திருந்தது.
அதற்கு ஏற்றவாறு டாஸிலும் வென்று பேட்டிங்கையும் தேர்வு செய்தார் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹஸன். ஆனால் நடந்தது என்ன? அவர்களது ஹீரோ தமீம் இக்பால் முதல் இரண்டு பந்தை ஆடாமல் விட்டார். ஆனால் அவருக்கு அதுவே பந்துகளை போதுமான அளவுக்கு பார்த்து விட்டோம் என்ற நிறைவைத் தந்திருக்கிறது!
அடுத்த பந்து கேமர் ரோச் வீசியது மிகவும் வெளியே சென்றது அதனை ஏதோ தான் ஒரு பிரையன் லாரா என்பது போல் சுழற்றினார் பந்து மட்டை விளிம்பில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பில் கேட்சாக அமைந்தது. ரசிகர்கள் ஆரவாரம் அப்படியே சோகமான மௌனமாக மாறிப்போனது.
அடுத்தடுத்து இம்ருல் கயேஸ், சித்திக், மிஷ்பிகுர், ஷாகிப், ராகிப், அஷ்ரபுல் என்று முன்னணி வீரர்கள் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டத் துவங்கினர். 18 ஓவர்களில் 58 ரன்களுக்குச் சுருண்டது.
அயர்லாந்துக்கு எதிராக முந்தைய போட்டியிலும் அலட்சியமாக ஆடிய வங்கதேசம் ஓரளவுக்கு சவாலான 205 ரன்களை எட்டியது. ஆனால் அதன் பிறகு சுழற்பந்து வீச்சைக் கொண்டு அயர்லாந்தை வீழ்த்தியது.
அந்த எதிர்பார்ப்புடன் இன்று வந்த ரசிகர்கள் வங்கதேசம் ஆடிய பொறுப்பற்ற ஆட்டத்தை மட்டுமே காண முடிந்தது.
FILE
ஒரு நேரத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் 4, 6 என்று ரன்களைக் குறிக்கும் அட்டைகளை மைதானத்தில் விட்டு எறியத் தொடங்கினர். சிலர் ஓய்வறை நோக்கியும் விட்டெறிந்தனர்.
மேற்கிந்திய அணி இலக்கைத் துரத்தக் களமிறங்கியபோது மைதானத்திலிருந்து வெளியேற ரசிகர்களிடையே போட்டாப் போட்டி நடந்தது. யாரும் இந்த அசிங்கமான தோல்வியைக் கண்கொண்டு காண விரும்பவில்லை அவ்வளவே.
இதுபோன்ற உலகக் கோப்பை போட்டிகளால் இந்த ஆட்டத்தொடரின் ஒரு சீரிய தன்மையே காலியாகிவிடுகிறது. ஜெஃப்ரி பாய்காட் கூறுவது போல் எப்போதோ ஒரு அதிர்ச்சி அளிக்கும் போட்டி நடக்கப்போகிறது என்பதற்காக எவ்வளவு மோசமான போட்டிகளை கடுமையாக நுழைவுக் கட்டணங்களை செலுத்திப் பார்க்கவரும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்வார்கள்?
ஒரேயொரு அயர்லாந்து அதிர்ச்சிக்காக, எவ்வளவு கனடா போட்டிகளையும், கென்யா, ஜிம்பாப்வே போட்டிகளையும் நாம் பார்க்கப்போகிறோம்?
நேற்று கனடா அணியினர் 184 ரன்களுக்கு பாகிஸ்தானைச் சுருட்டினர். இலக்கைத் துரத்தும் போது பெரிய அதிரடி ஆட்டம் ஆடிவிடுவோம் என்ற இறுமாப்பு இல்லாமல் அவர்கள் நிதானமாக விளையாடி அதனை கடைசி வரை பார்ப்பதற்குரிய போட்டியாக மாற்றினர். அஃப்ரீடி வந்து கதையை முடித்தார் என்பது வேறு கதை, இருந்தாலும் கனடா வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தனர். மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களும் ஒரு அதிர்ச்சியை எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்று வங்கதேச, மேற்கிந்திய போட்டியில் உண்மையில் கூறப்போனால் நம்ப முடியாத மேற்கிந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருப்பதாகவே அனைவரும் நம்பியிருப்பார்கள்.
ஆனால் ஊதிய பலூன் காத்திறக்கப்பட்டது மட்டுமல்லாமல் கிழிக்கவும் பட்டது. இனிவரும் அடுத்த போட்டிகளிலாவது வங்கதேச பேட்ஸ்மென்கள் தங்களை ஏதோ பெரிய நட்சத்திரங்களாக நினைத்துக் கொண்டு பந்து வீச்சாளர்களை மதிக்காமல் பேட்டை கண்டபடி சுழற்றும் பழக்கத்தை நிறுத்த முயலவேண்டும்.