முதலிடத்தை இந்தியா தக்கவைக்குமா? தோனி தலைமைக்குப் பெரும் சவால் காத்திருக்கிறது!

செவ்வாய், 19 ஜூலை 2011 (15:01 IST)
லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தத் தொடரை இங்கிலாந்து 2- 0 என்று கைப்பற்றினால் இந்தியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து முதன் முறையாக டெஸ்ட் தரநிலையில் முதலிடம் பிடிக்கும்.


 


இந்த டெஸ்ட் போட்டி 2000-வது டெஸ்ட் போட்டி என்பதும், சச்சின் தனது 100-வது சர்வ்தேச சதத்தை எடுப்பாரா என்பதும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது தொடரை இந்தியா 0- 1 என்று இழந்தாலோ அதன் முதலிடம் பாதிக்கப்படாது.

ஊடகங்கள் இந்த டெஸ்ட் தொடரை முதலிடத்திற்கான போராட்டமாகவே சித்தரித்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து ஊடகங்கள்.

கடந்த முறை 2007ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்தியா இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டபோது ஜாகீர் கான், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், கும்ளே ஆகியோரது அபாரப் பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் தொடரை 1- 0 என்று இந்தியாக் கைப்பற்றியது.

அப்போதைய இங்கிலாந்து அணி அந்தப் புதிய தலைமுறை வீச்சாளர்களைப் பற்றி அலட்சிய மனோபாவம் கொண்டதாலும், ஜாகீர், ஆர்.பி.சிங் ஆகியோரின் ரவுண்ட் த விக்கெட் பந்து வீச்சும், ஸ்ரீசாந்தின் துல்லியமும், கும்ளேயின் சிக்கனமும் இங்கிலாந்தை எழும்ப விடாமல் செய்தன.

அந்தத் தொடரில் முக்கியமாக சேவாக் இல்லாமலே இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்குத் தேவையான துவக்கத்தைக் கொடுத்தனர்.

ஆனால் அந்தத் தொடரில் இந்தியாவுக்கு அடித்த பெரிய அதிர்ஷ்டம் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆகும். கடைசி நாளன்று இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் மழை பிடித்துக் கொண்டு ஆட்டம் நிறுத்தப்பட்டு டெஸ்ட் போட்டி டிரா ஆனது. தோனி 76 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அவருக்கு ஒரு முக்கியமான கேட்ச் ஒன்று கோட்டை விடப்பட்டது. ஸ்ரீசாந்த் பேட்டிங் செய்தபோது ஒரு எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்படவில்லை. இதனால் இந்தியா தப்பிப் பிழைத்தது.

3-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றரை நாள் கால அவகாசம் இருந்தும் சுமார் 300 ரன்கள் பக்கம் முன்னிலை பெற்றிருந்தும் கேப்டன் திராவிட் அராஜகமாக ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போது மேற்கிந்திய தீவுகளில் தோனி கடைசி 15 ஓவர்களை தியாகம் செய்தது போல் திராவிட் அப்போது கைமேல் இருந்த வெற்றியை வேண்டுமென்றே பறி கொடுத்து டெஸ்ட் போட்டியை அறுவையாக மாற்றினார்.

இந்த முறை இதுபோன்ற தவறுகளைச் செய்தால் இந்திய அணி தன் முதலிடத்தை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.
 

FILE
ஸ்ட்ராசின் தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி தற்போது புதிய எழுச்சி கண்டுள்ளது. பேட்டிங்கில் ஸ்ட்ராஸின் முக்கியப் பக்களிப்புடன், அலிஸ்டர் குக்கின் புதிய துவக்க அவதாரமும் இந்திய அணிக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதே போல் ஜொனாதன் டிராட் ஆடி வரும் ஆட்டம் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாகப் போய் முடியும் என்றும் எதிரபார்க்கலாம். இயன் பெல், பீட்டர்சன் என்று பேட்டிங் பலமாக உள்ளது.

பந்து வீச்சில் ஆண்டர்சன், டிரெம்லெட் அபாயக் கூட்டணி வகுக்க, கிரகாம் ஸ்வான் ஓரிரு மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை சாய்த்தால் இந்திய அணி தோல்வியின் விளிம்பிற்குச் செல்வது உறுதி.

இது தவிர டிம் பிரெஸ்னன் விளையாடினால் இந்தியாவுக்கு மேலும் தொல்லைதான். அதனால் ஃபார்மில் இல்லாத ஸ்டூவர்ட் பிராட் விளையாட வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போமாக!

இந்திய அணியைப் பொறுத்தவரை துவக்கம் பலவீனமாக உள்ளது. முகுந்த் அனுபவமற்றவர் ஆனால் தைரியமானவர். கம்பீர் காயத்திலிருந்து வந்துள்ளார். எனவே இவர்கள் இருவரையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பார்த்தீவ் படேல் சிறந்த ஹூக் மற்றும் புல் ஷாட் வீரர். அவரைத் துவக்கத்தில் களமிறக்கி ஜேம்ஸ் ஆண்டர்சன், டிரெம்லெட் ஆகியோரை அடித்து விளையாடச் செய்து ஓரளவுக்கு இங்கிலாந்தின் திட்டங்களை அச்சுறுத்தலாம்.

இல்லையெனில் யுவ்ராஜ் எப்படியும் இந்திய அணியில் இடம்பெறுவார் எனும் பட்சத்தில் ஒரு அதிரடி உத்தியாக யுவ்ராஜ் சிங்கை கம்பீருடன் களமிறக்கிப் பார்க்கலாம். வந்தால் மலை...! கங்கூலி ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்த முயற்சியை சென்னையில் செய்தார். ஆனால் மழை காரணமாக 5ஆம் நாள் நடைபெறாமல் போனது.

FILE
மற்றபடி இந்தியாவின் நடுக்களம் திராவிட், சச்சின், லஷ்மண், தோனி, ரெய்னா, என்று பலமாக உள்ளது. போதாதற்கு ஹர்பஜன் சிங்கின் பேட்டிங்கும் பலம் சேர்க்கிறது.

பந்து வீச்சில் இந்தியாவுக்கு இந்த முறை இஷாந்த் ஷர்மா வந்துள்ளது இங்கிலாந்துக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்று நினைக்க வைக்கிறது. அவர் டெனிஸ் லில்லி போல் வீசி வருகிறார். அதனால் இங்கிலாந்து ஜாகீர் கான், இஷாந்த் கூட்டணி முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

மூன்றாவது வீச்சாளராக பிரவீண் குமாரைச் சேர்ப்பது சிறந்தது. ஏனெனில் ஸ்ரீசாந்த் பயிற்சி ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. பிரவீண் குமாரின் இரு புறம் ஸ்விங் செய்யும் திறமை புதிய பந்தில் கைகொடுக்கலாம், இவர் குக்கையோ, ஸ்ட்ராஸையோ துவக்கத்தில் வீழ்த்தினால் இங்கிலாந்து நிச்சயம் பின்னடைவு காணும்.

நடுக்கள வீரர்களில் பீட்டர்சன், பெல், மோர்கன் இருந்தால் அவர் ஆகியோரை வீழ்த்த ஹர்பஜன் சிங் திட்டமிடல் செய்வது அவசியம்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்டக்களம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையலாம். இதனால் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் ஆகியோருடன் களமிறங்கலாம். அதாவது கம்பீர், யுவ்ராஜ்/முகுந்த்/படேல், திராவிட், சச்சின், லஷ்மண், ரெய்னா, தோனி, ஹர்பஜன், ஜாகீர்கான், இஷாந்த், பிரவீண் குமார் என்ற அணியை விட ஹர்பஜனை உட்கார வைத்து விட்டு ஸ்ரீசாந்தை களமிறக்கிப் பார்க்கலாம்.

ஆனால் தோனி அவ்வாறு செய்ய மாட்டார். 3 வேகப்பந்து வீச்சாளர் ஒரு ஸ்பின்னர் என்பது உறுதியான அணியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த முறை இந்திய அணி ஆர்.பி.சிங்கின் பந்து வீச்சை இழந்துள்ளது. சேவாகின் அதிரடித் துவக்கத்தை இழந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு இங்கிலாந்தை ஒப்பு நோக்குகையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் பயிற்சியாளர் பிளெட்சர் இந்த இங்கிலாந்து அணி வீரர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளதால் அவரது அறிவுரை இந்தியாவுக்குப் பக்க பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆட்டத்தை டிரா செய்யும் எண்ணத்தை விடுத்து துவக்கம் முதலே ஆக்ரோஷத்தைக் காட்டினால் இங்கிலாந்து திணறும் என்பது உறுதி.

தோனியின் தலைமையில் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலே இந்தத் தொடர். இந்தப் பரீட்சையில் தோனி தேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்