தோனி ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டன்தானா?

வியாழன், 29 டிசம்பர் 2011 (17:16 IST)
FILE
மெல்பர்ன் டெஸ்டில் இந்தியா சிறந்த வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் தோல்வியே அணியின் தோல்விக்கு காரணம் என்று தலைவர் தோனி கூறியது ஒரு சம்பிரதாயமான பதில். அதையும் மீறி அவரது டெஸ்ட் தலைமை வகிப்புத் திறமை மீது கடுமையாக சந்தேகங்கள் எழுந்துள்ளது!

இங்கிலாந்தில் தோல்விகளுக்கு காயங்களை காரணமாகக் கூறி தப்பித்தாலும், பொதுவாக ஒரு கேப்டனாக தோனி களத்தில் வீரர்களை வழி நடத்திய விதம், கள அமைப்பு, பந்து வீச்சு மாற்றம், ஆக்ரோஷமற்ற வியூகம், எளிதில் எதரணியினர் மீது உள்ள பிடியை நழுவ விடுவது என்று தோல்வியடைந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் நுணுக்கங்களுக்கும் இவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றே நினைக்கவைக்கிறது பதற வைக்கும் அவரது களவியூகம், குறிப்பாக எந்த அணியின் சொத்தையான பின் கள வீரர்களையும் 100 ரன்களுக்கும் மேல் எடுக்க விடுமாறு இவரது கள வியூகம் அமைவதும், பந்து வீச்சு மாற்றமும் கிரிக்கெட் தெரிந்தவர்கள் மத்தியில் கடும் எரிச்சலையே ஏற்படுத்தும்.

எதிரணித் தலைவர் மைக்கேல் கிளார்க், தனது அனுபவமற்ற பந்து வீச்சை வைத்துக் கொண்டு நல்ல ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்துக்கூட நம்மவர் திருந்தவில்லை. கிளார்க்கின் களவியூகத்திற்கும், தோனியின் களவியூகத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் ஆகும். கேப்டன் ஆக்ரோஷ களவியூகம் அமைத்தால்தான் பந்து வீச்சாளர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். இரண்டு பவுண்டரி போனால் உடனே 2 ஸ்லிப்பை நீக்கினால் பந்து வீச்சாளர்கள் நம்பிக்கை பறிபோகும் என்பதோடு, அந்தப் பந்து வீச்சாளரின் கிரிக்கெட் எதிர்காலத்தையும் தோனி அழிக்கிறார் என்றே அர்த்தம்.

மெல்பர்னில் முதலில் அணித் தேர்வில் கோலியை தேர்வு செய்தது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. அனுபவஸ்தர்களான சேவாக், கம்பீர், திராவிட், லஷ்மண் போன்றவர்களையே ஆட்டிப் படைக்கும் ஆட்டக்களத்தில் கோலி எவ்வாறு பேட் செய்ய முடியும்? ரோஹித் ஷர்மாதான் அந்த இடத்திற்குச் சிறந்தவர் என்று விவரமறிந்தவர்கள் எடுத்துக் கூறியும் நான் வீரர்களை "பேக் அப்" செய்கிறேன் என்று கோலிய விரவில் பாக்-ஆப் செய்யும் வேலையையே தோனி செய்துள்ளார்.

நாம் விஷயத்துக்கு வருவோம்! ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இன்னிங்ஸை துவங்கும்போது 51 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தனர். ஆனால் ஜாகீர், யாதவ், இஷாந்த் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சினால் அந்த அணி 27/4 என்று தடுமாறிய போது, ஒரு முனையில் மட்டுமே நான் தாக்குவேன் மறு முனையில் கட்டுப்படுத்துவேன் என்று அசட்டுத் தனமான கொள்கை பூண்டு தடவிக்கொண்டிருக்கும் ஹஸ்ஸிக்கும், பாண்டிங்கிற்கும் எளிதான சிங்கிள்களையும் தான் கட்டுப்படுத்துவேன் என்ற முனையிலிருந்து பவுண்டரிகளையும் வாரி வழங்குமாறு களவியூகம் அமைத்தார் தோனி.

டீப் பாயிண்ட், டீப் ஸ்கொயர் லெக் என்று ஃபீல்டிங்கை தளர்த்தி செட்டில் ஆன பேட்ஸ்மென்களுக்கு எந்த வித நெருக்கடியும் கொடுக்காமல் அவர்களை சுலபமாக சிங்கிள் எடுக்க அனுமதித்தவர் தோனி. பிறகு லஷ்மன், சச்சின் ஆகியோரது அறிவுரையின் பேரில் மீன்டும் ஜாகீரை அழைத்தார். ஜாகீருக்கு அவர்தான் பீல்டிங் அமைப்பார். நல்ல வேளையாக தோனி இல்லை. இதனால் பாண்டிங்கையும் ஹெடினையும் வீழ்த்தி பிறகு லயான், சிடில் ஆட்டமிழக்க ஆஸ்ட்ரேலியா மீண்டும் ததிங்கனத்தோம் போட்டது.

முதலில் ஹஸ்ஸிக்கும், பாண்டிங்கிக்கிற்கும் நெருக்கடி கொடுத்திருந்தால் ஜாகீர் அவர்களை துவக்கத்திலேயே காலி செய்திருப்பார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்ட்ரேலியா 100 ரன்கள்தான் எடுத்திருக்கவேண்டும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸீலாந்தாக இருந்திருந்தால் 27/4 என்றநிலையில் ஆஸ்ட்ரேலியா 70 ரன்களுக்குச் சுருண்டு மண்ணைக் கவ்வியிருக்கும்.

இந்த வாய்ப்புகளையெல்லாம் தனது மோசமான கேப்டன்சி உத்தி மூலம் கெடுத்திருக்கிறார் தோனி. சரி அது போகட்டும் 179/8 என்ற நிலையில் இன்று காலை அவர் அமைத்த கள வியூகம் வர்ணனை செய்த கங்கூலி, இயன் சாப்பல், ரவி சாஸ்திரி போன்றாவர்களையே எரிச்சலூட்டியது.

மேலும் 61 ரன்களை சேர்த்தனர் ஆஸ்ட்ரேலியர்கள், அதுவும் ஹில்ஃபென் ஹாஸ் என்ற தண்ட வீரரும், பேட்டின்சனும் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 43 ரன்களைச் சேர்க்கின்றனர்!

இவையெல்லாவற்றையும் செய்து விட்டு, "பின் கள வீரர்களை வீழ்த்த் தனி சூத்திரம் கண்டுபிடிக்கவேண்டும்" என்று பெரிய கிரிக்கெட் ஞானி போல் உளறிக்கொட்டியிருக்கிறார் தோனி.

குறைந்தது தோல்வி பற்றி 'இட் ஹேப்பன்ஸ்' என்ற கருத்துடன் முடித்திருக்கலாம். பயிற்சியாளர் ஒருவர் இருக்கிறார் பாருங்கள், தோனி செய்வதையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு தன் பையை நிரப்பிக் கொள்ளும் டன்கன் பிளெட்சர்! அவர் ஒரு தண்ட பிளெட்சர்!

சரி! 292 ரன்கள் விட்டுக் கொடுத்தாகிவிட்டது. ஆஸி. வலையில் விழுந்தாகிவிட்டது. இனி இரண்டாவது இன்னிங்ஸை எப்படி கட்டமைக்கவேண்டும் என்ற திட்டமாவது இருந்ததா என்றால் இல்லை.

முதலில் இது போன்ற வேக ஆட்டக்களங்களில் ரன்களை எடுப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளில் பல பவுண்டரிக்கு விரட்டப்படக்கூடியவையே. அதனை நாங்கள் ஆடாமல் விட்டு விடுகிறோம், நாங்கள் 'டெக்னிக்கலி சவுண்ட்' வீரர்கள் என்று நின்று கொண்டேயிருந்தால் ஒரு பந்து ஸ்டம்ப்களுக்குள்ளோ, அல்லது மட்டையை அதுவே தொட்டுக்கொண்டு கேட்சாகவோ போய் முடிஉம் என்பது ஆஸ்ட்ரேலிய ஆட்டக்களங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாகவே புரியும்.

முதல் 6 வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் ஒருவர் கூட தேற மாட்டார்கள். ஆளுக்கு 25 அல்லது 30 ரன்கள் எப்படியாவது அடித்தே தீருவது என்று பலமான மணொநிலையில் களமிறங்க முடியவில்லையெனில் 'உலகிலேயே சிறந்த பேட்டிங் வரிசை' என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதில் என்ன பயன்?

குறைந்தது, கேப்டன் தோனி என்ன செய்திருக்கவேண்டும், எதிர்முனையில் அஷ்வின் காட்டும் ஆக்ரோஷமும் மனோதைரியத்தையும் கூட இவர் காட்டவில்லை.

தோனி மீதமுள்ள ஓவர்களை தன்னுடைய பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தியிருக்கவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இருபதுக்கு 20 ஷாட்டை அடித்து பவுல்டு ஆகி வெளியேறுகிறார். ஒரு அரைசதத்தையாவது அவர் அடித்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நானும் பேட்டிங்கில் தயராகிவிட்டேன் என்று எதிரணியினருக்கு அவர் சூசகமாக தெரிவித்திருக்க வேண்டாமா?

இங்கிலாந்தில் இவர் காயத்தை சாக்காகக் கூறினார் ஆனால் அங்கும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 120/8 என்ற நிலையிலிருந்து இவரது கள வியூகம் மூலம் இங்கிலாந்து வெற்றிக்கான கடின இலக்கை நிர்ணயித்தது.

இங்கிலாந்து முழுதும் இவர் கள வியூகம் அந்தத் தொடரையே காலி செய்து விட்டது.

இன்று அவரை மெல்பர்னில் சந்தித்த செய்தியாளர்களில் ஒருவர் கூட 'இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் தோல்வி' என்று கூறுகிறீர்களே, முதலில் உங்களது களவியூகத்தினால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பின் கள வீரர்கள் ரன் குவித்ததை ஏன் தடுக்க முடியவில்லை என்று கேட்கவில்லை.

அவரும் ரிவர்ஸ் ஸ்விங் ஆஸ்ட்ரேலியாவில் எடுபடவில்லை அதனால் டெய்ல் என்டர்கள் ரன் எடுக்கின்றனர் என்று நம் காதில் பூ சுற்றுகிறார். ஆஸ்ட்ரேலியாவில் குக்கபரா பந்தி ரிவர்ஸ் ஸ்விங் எடுக்காது என்று இவருக்கு தெரியாதா? ஆகையால் இதெல்லாம் ஏமாற்றுத் தனமான பேச்ச் என்று சுலபமாகத் தெரிகிறது.

இயன் சாப்பல், இவர் தோனியின் விசிறிதான், கூறுகையில் எதிர்மறை எண்ணங்கள், அணுகுமுறையைக் கைவிட்டாலே தவிர இந்தத் தொடரில் தோனி உருப்படமுடியாது என்றார். இவர் கூறுவது உண்மைதான்!

இன்று வர்ணனைப் பெட்டியில் அமர்ந்திருந்த கங்கூலி மிகச்சரியாகக் கூறியதையும் நாம் மறுக்க முடியாது. தோனியின் கள வியூகம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அவர் ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த கேப்டன் என்றார்.

தோனியின் இந்த அணுகுமுறையுடன் சிட்னியில் நாம் மீண்டும் வருவோம், வெற்றி பெறுவோம் என்று பாஞ்சாலி சபதம் செய்வது ஒரு போதும் நடப்பில் நிகழாது என்றே கூறலாம்.

இந்த ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்த முடியாமல் தொடர் தோல்வியுடன் அவர் திரும்பினால் அவரை டெஸ்ட் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்குவதே சாலச் சிறந்தது. அல்லது அவரே பொறுப்பை உணர்ந்து விலகி விடுவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்