ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் அனாயாச மட்டை சுழற்றி எதிரணியினரை கதிகலங்க அடிக்கும் சுரேஷ் ரெய்னா ஏன் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கமுடியவில்லை?
இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஒருதினப்போட்டிகளை விளையாடிய முதல் தொடரில், பரிதாபாத் மைதானத்தில் இங்கிலாந்தின் 226 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தியபோது இந்தியா 80/4 என்று ஆனது. பிறகு யுவ்ராஜ் சிங் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 92/5 என்று சரியும் அபாயத்தில் இருந்தது.
ஆனால் ரெய்னா களமிறங்கிய பிறகு ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது. ஒரு ஓவர் மீதமிருக்க இந்தியா வெற்றி. ரெய்னா 89 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.
அப்போது இங்கிலாந்தில் கார்டியன் இதழில் லாரன்ஸ் பூத் என்பவர் தான் எழுதிய பத்தியில், ரெய்னா போன்ற அச்சமூட்டும் ஹிட்டர் ஒருவர் உருவாகும் ஒரு நாட்டில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகான கிரிக்கெட்டை பற்றி அந்த நாடு கவலைகொள்ளத் தேவையில்லை என்று எழுதினார். ரெய்னாவை சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்துடன் ஒப்பிட்டே அப்போது இங்கிலாந்து பத்திரிக்கைகளில் எழுதப்பட்டன.
இந்தத் தொடருக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு விஸ்டன் கிரிக்கெட்டர் பத்திரிக்கையில் அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கத் தவறக்கூடாத 10 இளம் வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் இடம்பெற்றிருந்தார்.
இவர் உத்திரப்பிரதேசத்தில் இந்தியாவின் எதிர்கால கேப்டன் என்று அப்போது வர்ணிக்கப்பட்ட மொகமட் கயீஃப் தலைமையில் மேலும் மெருகுபெற்றார். 4 நாள் போட்டிகளிலும் ரெய்னா தன் திறமையைக் காண்பிக்க, இலங்கைக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் அவர் தன் முதல் போட்டியில் விளையாடினார்.
சதம் எடுத்தார் சச்சினே ரெய்னா ஒரு அபாரமான டெஸ்ட் வீரர், அவர் சுலபமாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தன்னை பழக்கிக் கொண்டு விட்டார் என்றெல்லாம் கூறினார். பிறகு ஏன் மேற்கிந்திய தீவுகளிலும், இங்கிலாந்திலும் அவர் திணறினார் என்பதுதான் கேள்வி.
ஒருநாள் போட்டிகளில் லேசாக ஷாட் பிட்ச் என்று தெரிந்தாலே திரும்பிக் கொண்டு புல், ஹுக் என்று அடிப்பவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதே பந்துகளில் திக்கித்திணறி அதன் பிறகு ஒரு சாதாரண ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயான விட்டுவிட வேண்டிய பந்துக்கு ஏன் ஆட்டமிழக்கிறார் என்பது அவரது தனி நகர் பலவீனமாக மட்டுமே பார்க்கப்படக்கூடியதல்ல.
பிப்ரவரி 2003ஆம் ஆண்டு தனது முதல் தர கிரிக்கெட்டை ஆடத்துவங்கிய ரெய்னா இன்று 8 ஆண்டுகள் ஆகியும் ஆடிய மொத்த முதல் தர கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் உட்பட மொத்தம் 67தான். இதில் 15 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். முதல் தர கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அடங்காது.
ஆனால் இவருக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டை ஆடத்துவங்கிய இங்கிலாந்தின் துவக்க வீரர் அலிஸ்டைர் குக் இந்த 8 ஆண்டுகளில் இதுவரை 72 டெஸ்ட் போட்டிகள் உட்பட 172 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
லிஸ்ட் ஏ போட்டிகள் என்று அழைக்கப்படும் ஒருநாள் போட்டிகளில் ரெய்னா 169 போட்டிகளிலும் டுவென்டி 20 கிரிக்கெட்டில் 91 போட்டிகளிஉம் இந்த 8 ஆண்டுகளில் விளையாடியுள்ளார்.
FILE
நீண்ட நாள் கிரிக்கெட்டில் அவர் நிறைய விளையாடியதில்லை. மேலும் அவருக்கு அயல்நாட்டு கிரிக்கெட் மைதானங்களில் கவுண்டி கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களும் இல்லை. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை போன்ற 4நாள் 5 நாள் போட்டிகளில் அவர் இந்த 8 ஆண்டுகளில் 52 போட்டிகளிலேயே விளையாடியுள்ளார்.
எனவேதான் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான அணுகுமுறையே தெரியாமல் இருந்துள்ளது. இங்குதான் பயிற்சியாளர்கள் அவரைத்தயார் செய்திருக்கவேண்டும். ஆனால் பயிற்சியாளர்கள் மூத்த வீரர்கள் மட்டுமல்லாது அணியின் ஒட்டுமொத்த உத்தி, பந்து வீச்சு என்று அனைத்தையும் பார்க்கவேண்டியிருப்பதால் ரெய்னாவின் திறமை டெஸ்ட் போட்டிகளில் வீணடிக்கப்பட்டுள்ளது.
ரெய்னா தானாகவே டெஸ்ட் போட்டிகளுக்கு தன்னை தகவமைத்துக் கொள்வார் என்று நம் தேர்வாளர்களும் கிரிக்கெட் பண்டிதர்களும் முடிவு கட்டிவிட்டனர். இங்கிலாந்தில் ரெய்னாவின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஷாட் பிட்ச் பந்து மட்டுமல்லாது இங்கிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சிற்கு எதிராக ஆடிப்போன அவரது பேட்டிங் கிரகாம் ஸ்வானுக்கு எதிராகக் கூட செயலற்று போனது.
ஸ்வான் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து நேராக ஒரு பந்தை வீச ரெய்னா கிரீஸில் நின்றபடி அதனை 3 முறை கால்காப்பில் விளையாடி எல்.பி.டபிள்யூ. ஆனார். ரெய்னா ஷாட் பிட்ச் பந்துகளுக்குத் திணறுவது பிரச்சனையல்ல, மாறாக ஸ்வான் பந்தில் இதுபோன்று உத்திரீதியாக தவறு செய்து நேர் பந்துகளுக்கு ஆட்டமிழப்பது ரெய்னாவின் டெஸ்ட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
3நாள், 4 நாள், 5 நாள் போட்டிகளில் ரெய்னா அதிகம் விளையாடவேண்டும்.முன்பு இந்தியா ஏ என்ற அணியை உருவாக்கி அந்த அணி இங்கிலாந்து, இலங்கை என்று பயணம் மேற்கொள்ளும் இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாகவே அவருக்கு அயல்நாட்டு மைதான சூழ்நிலைகள் புரியவரும். ஆனால் இப்போது இந்தியா ஏ அணி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் வருகை பல உள்நாட்டு சிறந்த கிரிக்கெட் மாதிரிகளை அழித்துவிட்டது என்றால் அது மிகையானதல்ல.
செடேஷ்வர் புஜாரா என்ற ஒரு பேட்ஸ்மென் இந்தியா ஏ அணிகளிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி வந்ததால்தான் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ரெய்னா அவரது ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் திறன்களுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்பட்டார். இதுதான் வித்தியாசம்.
இங்கிலாந்து தொடரில் இந்தியாவில் அதிக ரஞ்சி, திலிப் கோப்பை 4நாள், 5 நாள் போட்டிகளில் விளையாடும் வாசிம் ஜாபரை அழைத்துச் சென்றிருந்தால் நாம் துவக்கத்தில் தவித்திருக்கவேண்டிய அவசியமிருந்திருக்காது.
இப்போதைக்கு சச்சின், திராவிட், லஷ்மண், சேவாக் இருக்கின்றன்ர். அவர்கள் ஓய்வு பெற்றவுடன் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கு தகுதியான வீரர்களே இல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த அபாயத்தின் முன்னறிவிப்புதான் ரெய்னாவின் டெஸ்ட் தோல்வியாகும். விழித்துக் கொள்ளுமா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்? ஸ்ரீனிவாசன் புதிய வழியைக் கடைபிடிப்பாரா? சுவர் இருந்தால்தான் சித்திரம் சிறந்த டெஸ்ட் வீரர்கள் இருந்தால்தான் கிரிக்கெட். உணருமா இந்திய கிரிக்கெட்?