இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 30வது பிறந்த நாள். 2004அம் ஆண்டு அவர் இந்திய அணியில் நுழைந்தார். தற்போது இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்ற பெயர் எடுத்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 20-வது வயதில் தோனி ராஞ்சி ரெயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியவர் என்று கூறப்படுவதுண்டு.
டிக்கெட் கலெக்டராக இருந்த நேரம் போக மீதி நேரங்களில் காரக்பூர் மைதானங்களில் கிரிக்கெட் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்து வந்தார்.
பேருந்தில் டிக்கெட் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்த சிவாஜி ராவ் பிற்பாடு பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தாக் வளர்ந்தது போல் தோனி இன்று தனது கடுமையான உழைப்பு, முயற்சி ஆட்டத்திறன் ஆகியவற்றினால் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்ற புகழை பெற்று இன்று நம் முன் வளர்ந்து நிற்கிறார்.
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பல அணிகளை தனது சக்தி வாய்ந்த அடிதடி பேட்டிங் மூலம் அச்சுறுத்தியவர் தோனி.
இந்தியாவுக்காக ஆடிய போது இலங்கைக்க்கு எதிராக அவர் எடுத்த 183 ரன்கள் இன்றளவிலும் இலங்கை பந்து வீச்சாளர்கள் மத்தியில் சிம்ம சொப்பனமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்.
தோனிக்கு எப்போதும் கோப்பைகளின் மீடு அலாதிப் பிரியம். அதனால்தான் 2007ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பு ஏற்றுக் கொண்டவுடன் நடந்த முதல் இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் கொண்டு வந்தார்.
பிற்பாடு ஒருநாள் போட்டிகளில் இவரது ஆட்டத்தினால் பாகிஸ்தானும், இலங்கையும் பெரிய அளவில் அடி வாங்கிக் கட்டிக் கொண்டது.
களத்தில் நினைத்துப் பார்க்க முடியாததை, பிறக் கேப்டன்கள் செய்யத் துணையாததை இவர் செய்வதில் புகழ் பெற்றவர் என்பதோடு அதில் வெற்றியும் கண்டவர்.
இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையில் கடைசி ஓவரை ஜொஹீந்தர் ஷர்மாவுக்குக் கொடுத்தபோதே இவரது தைரியம் பாராட்டுகளைப் பெற்றது. கோப்பையை வென்றவுடன் தோற்றிருந்தாலும் ஒன்றும் பெரிய கவலையில்லை என்று கூறினார். அப்போது முதல் செல்லமாக கேப்டன் கூல் என்றே அழைக்கப்படுகிறார் தோனி.
இவரது மற்றொரு சிறப்பு தனிப்பட்ட முறையில் இளமையின் துடிப்பை விரும்பினாலும் அணியில் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை அரவணைத்துச் சென்று அவர்களது அனுபவத்திலிருந்து தான் கற்றுக் கொண்டு அணியை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
கேப்டன் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் ஆஸ்ட்ரேலியாவை ஆஸ்ட்ரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இருதரப்பு தொடர்களில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூஸீலாந்து ஆகிய அணிகளுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றது.
கடைசியாக முத்தாய்ப்பாக கேரி கர்ஸ்டன் கூட்டணியில் தனது அபாரமான 91 ரன்கள் இன்னிங்ஸினால் இறுதிப் போட்டியில் இலங்கையின் கனவைத் தகர்த்து இந்திய கிரிக்கெட் ரச்கர்களின் 28 ஆண்டுகள் உலக சாம்பியன் கனவைப் பூர்த்தி செய்தது என்று தோனியின் புகழ் கொடிகட்டிப் பறந்து வருகிறது.
இந்த சாதனையெல்லாமிற்குப் பிறகு, அவரிடம் பத்திரிகையாளர் சந்திப்பில், நீங்கள் இந்தச் சாதனைகளை அடுத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது மீண்டும் அனைத்தையும் ஒரு முறை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.
இவரால் முடியும் என்றே தோன்றுகிறது. தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.