பெங்களூரில் நேற்று அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து ஆட்டத்திற்கு முன்பு ரசிகர்களிடையே இருவிதமான மனப்போக்கு இருந்தது. ஒன்று அந்த அணி இங்கிலாந்தை அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்றது என்று, இரண்டாவது இந்திய அணி அவ்வளவு எளிதில் வெற்றி பெற்று விடமுடியாது என்று. இந்த இரண்டு கருத்துக்களில் இரண்டாவது பார்வைதான் நேற்று வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. தோனியும் கூட இந்திய அணியின் பலவீனமான பந்து வீச்சை மனதில் கொண்டும், அயர்லாந்தின் அதிர்ச்சியளிக்கும் திறமை குறித்தும் ஓரளவுக்கு கருத்தில் கொண்டே முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்திருப்பார். ஆனால் அவ்வாறு கூறாமல் அவர் ஆட்டக்களம் அது, இது என்று கூறினார்.
ஆட்டம் முடிந்தவுடன் தோனியே அயர்லாந்து அணியின் இரண்டு விஷயங்களை பாராட்டினார். ஒன்று அந்த அணியின் ஃபீல்டிங், அது உண்மையில் உலகத் தரம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆஸ்ட்ரேலியாவுக்கு அடுத்தபடியான ஃபீல்டிங் அது. இன்னொரு விஷயம் நிறுத்தப்பட்ட கள வியூகத்திற்குத் தக்கவாறு பந்து வீச்சாளர்கள் பந்து வீசியது. இதுவும் தோனியின் பாராட்டுகளில் ஒன்று.
இங்கிலாந்துடன் பெற்ற வெற்றி ஒன்றும் அதிர்ஷ்டம் அல்ல என்பதை நேற்று அயர்லாந்து நிரூபித்தது. சேவாக் பந்தை லெக் திசையில் திருப்ப முயன்று பந்து எதிர்திசையில் சென்று ஆட்டமிழப்பது இது இரண்டாவது முறையாகும். இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டர்சன் ஓவரில் நிறைய பந்துகள் மட்டையின் விளிம்பில் பட்டு ஃபீல்டர்களை ஏமாற்றி தள்ளிப் போய் விழுந்தது. நேற்று பவுலர் கையில் அது தஞ்சமடைந்தது.
மேலும் சச்சின் போன்ற ஒரு வீரரை சிங்கிள் எடுக்க விடாமல் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தினர். அதேபோல் இரண்டு ரன்கள் வாய்ப்பிருந்தும் அதனை இரண்டாக்காமல் ஒன்றாகவே மாற்றினர் அயர்லாந்து ஃபீல்டர்கள்.
கம்பீரை அவர்கள் நிறுத்தி எடுத்த விதம் பாராட்டுக்குரியது. ஃபைன் லெக் ஃபீல்டரை 30அடி வட்டத்திற்குள் அழைத்தார் ஜான்ஸ்டன், அதனை அவர் பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அதனை அந்த ஃபீல்டரைத் தாண்டி அடித்து விடலாம் என்று கவுதம் கம்பீர் நினைத்து வீழ்ந்தார்.
PTI Photo
FILE
சச்சின் டெண்டுல்கருக்கு சமீப காலங்களில் செட் செய்யப்பட்ட சிறந்த களவியூகம் நேற்று அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் செய்ததுதான். அதே போல் துவக்க ஓவரை வீசிய ரான்கின் ஒரு கைதேர்ந்த பந்து வீச்சாளர் போல் வீசினார். நடுவில் ஒரு ஓவரை அவர் யுவ்ராஜ் சிங்கிற்கு மைடன் ஓவராக வீசினார். அதுவும் யுவ்ராஜின் பலவீனம் அறிந்து வீசியது போல் இருந்தது அந்தப் பந்து வீச்சு. ஆக்ரோஷமாக வீசினார்.
டாக்ரெல் என்ற இளம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் உலகக் கோப்பையை விளையாடியபோது பிறந்தவர், இருப்பினும் சச்சினுக்கு அவர் நிறுத்தப்பட்ட ஃபீல்டிங்கிற்குத் தக்கவாறு வீசி ஆச்சரியப்படவைத்தார்.
ஆனால் யூசுப் பத்தான் போன்ற வீரர்களுக்கு வீசுவது கடினம் என்பதும் தெரிந்தது. சச்சினையும், தோனியையும் வீழ்த்தி லேசான நம்பிக்கை கீற்றை அயர்லாந்துக்கு அளித்த டாக்ரெல் தோனியை வீழ்த்திய அதே ஓவரிலேயே எல்லாம் முடிந்து விடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்தியா துவக்கம் முதலே ஆட்டத்தின் போக்கை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்ததாகக் கூற இயலாது. சச்சின், கோலி ஆட்டமிழந்தபிறகு 100/4 என்ற நிலையில் சற்றே அச்சம் ஏற்படத்தான் செய்திருக்கும். ஆனால் அதனை நாம் மனம் திறந்து வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்குவோம்.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் கவலை ஒன்று குறைந்த இலக்கை சிரமமின்றி துரத்த இயலாதது. மற்றொன்று பந்து வீச்சு. பியூஷ் சாவ்லா பற்றி தோனியும், பயிற்சியாளரும் தீவிரமாக யோசனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டது. எந்த பேட்ஸ்மனும் எந்த பந்து வீச்சாளரையும் அடித்து நொறுக்கலாம். ஆனால் அடிக்குப் பயந்து வைடுகளை வீசும் வீச்சாளர் அணிக்குத் தேவையில்லை. தோனியும் அவர் வைடு வீசுவதை ஊக்குவிக்குமாறு லெக்-ஸ்லிப் ஒன்றையும் நிறுத்தினார்!
அஷ்வினுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம். இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள் தேவையில்லை என்று நினைப்பது அபத்தமானது. ஏனெனில் அஷ்வின் வீசும் ஆஃப் ஸ்பின்னிற்கும், ஹர்பஜன் வீசும் ஆஃப் ஸ்பின்னிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. மேலும் அஷ்வினை துவக்க ஓவரை வீசக் கூட நாம் அழைக்கலாம். ஏற்கனவே அவர் அந்தப் பரீட்சையில் தேறியிருக்கிறார்.
webdunia photo
FILE
இந்தச் சாவ்லா தேவையேயில்லை. ஒருநாள் போட்டிகளில் அவரது அனுபவமின்மை நேற்று பளிச்சிட்டது. அவருக்கு பதிலாக பேசாமல் ரெய்னாவையே வைத்துக் கொள்ளலாம். ரெய்னா ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, நிச்சயம் சாவ்லாவைக் காட்டிலும் ரன்களை குறைவாகவே விட்டுக் கொடுப்பார் என்று நம்பலாம். நமக்கு 8 பேட்ஸ்மென் என்ற ஒரு பலமாவது இருக்கும்.
டாஸில் வென்று எதிரணியினரை பேட் செய்ய அழைத்து அடித்துக் கொள்ளுங்கள் விரட்டுகிறோம் என்ற கொள்கையை கடைபிடிக்கலாம்.
சச்சின், சேவாக், கம்பீர், கோலி, யுவ்ராஜ், யூசுப், தோனி, ரெய்னா, ஹர்பஜன், அஷ்வின், ஜாகீர் என்று கடைசி வரை பேட்டிங் பலமாகவாது இருக்கும். எதிரணியினரும் இந்த பலமான பேட்டிங் வரிசைக்கு இலக்கை நிர்ணயிப்பதில் நெருக்கடிகளைச் சந்திப்பார்கள்.
அயர்லாந்து நிச்சயம் நேற்றைய ஆட்டம் போன்ற ஒரு ஆட்டத்தை மேற்கிந்திய அணிக்கு எதிராக வெளிப்படுத்தினால் வெற்றியும் கூட சாத்தியம்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அஷ்வினையும், ரெய்னாவையும் அணியில் சேர்த்து விளையாடிப் பார்க்கவேண்டும்.
குறைந்தது ஹாலந்துக்கு எதிராகவாவது இந்த அணியை முயன்று பார்ப்பதில் ஆபத்து ஒன்றுமில்லை. பரிசீலிப்பாரா தோனி?