ஆஸ்ட்ரேலிய தோல்வியில் சில சந்தேகங்கள்... சில கேள்விகள்...

வெள்ளி, 2 மார்ச் 2012 (22:56 IST)
இன்று மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்ட்ரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முக்கிய போட்டியில் அதாவது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் முக்கியப் போட்டியான இதில் இலங்கை கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஆஸ்ட்ரேலியாவின் இன்றைய ஆட்டம் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் வெளிப்படையாக எழுப்புவதாக உள்ளது.

FILE


38வது ஓவர் முடிவில் பவர் பிளே போய்க்கொண்டிருந்த வேளையில் ஆஸ்ட்ரேலியா 172/6 என்று உள்ளது. அதாவது அப்போது வெற்றிக்குத் தேவை 12 ஓவர்களில் 67 ரன்களே. அதாவது 6 ரன்களுக்கும் குறைவான ரன்விகிதமே தேவைப்பட்டது.

ஆனால் திடீரென எல்லாம் பேசி வைத்து நடப்பது போல் 39வது ஓவரில் குலசேகரா வீச 41 பந்துகளில் 37 ரன்கள் என்று அபாரமாக ஆடிவந்த டேவிட் ஹஸி, ஒன்றுமேயில்லாத குலசேகராவின் 39வது ஓவரை மைடன் ஓவராக மாற்றுகிறார்.

உடனே வெற்றி பெற தேவையான ரன் இலக்கு ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் சென்றது. அந்த ஓவரை அதுவும் பவர் பிளேயில் இருக்கும்போது 6 பந்துகளையும் தடுத்தாட வேண்டிய அவசியம் -ஹஸிக்கு ஏன் ஏற்பட்டது என்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதில் ஒருபந்தில் பயங்கர எல்.பி. முறையீட்டில் அவர் பிழைக்கவும் செய்தார்.

அதன் பிறகும் ஹஸி விட்டேத்தியாக ஸ்ட்ரைக்கை பேட்டின்சனிடமும், டோஹெர்ட்டியிடமும் தாராளமாக வழங்கினார். இதனால் இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. ரன் விகிதம் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

குலசேகரா முதல் பந்தை வீச அதனை நேராக குறிபார்த்து எந்த வித சலனமும் இல்லாமல் லாங் ஆஃப் பீல்டர் கையில் அடிக்கிறார், மிக எளிதான கேட்ச் இலங்கை வெற்றி பெற்றது.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு இலங்கையை இறுதிப் போட்டியில் வெல்வதைக் காட்டிலும் இந்தியாவை வெல்வதுதான் எளிது. ஆனால் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியில் எழுச்சியுற்றது ஆஸ்ட்ரேலியாவை அச்சுறுத்தியிருக்கும் என்று எண்ண இடமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு பெரிய அணியும் மற்றொரு அணியை அச்சுறுத்தலாக கருதாது.

இந்தப் போட்டியின் மூலம் எழும் சில சந்தேகங்கள் இதோ:

முதன் முதலாக தோனி தலைமையில் நாம் 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் நடந்த முத்த்ரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இறுதியில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று கோப்பையை வென்றோம். அந்தத் தொடர்தான் கடைசி முத்தர்ப்பு தொடர் என்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. ஏனெனில் ஆஸ்ட்ரேலியா அணி விளையாடாத போட்டிகளுக்கு கூட்டமும் வருவதில்லை, தொலைக்காட்சி ரேட்டிங்கும் மிகக்குறைவு என்பதாலேயே அது ஒழிக்கப்பட்டு இருதரப்பு ஒருநாள் தொடராக மாற்றப்பட்டது.

ஆனால் திடீரென இந்த முறை முத்தரப்பு ஒருநாள் தொடர் என்று அறிவித்தது. குறிப்பாக இரண்டு ஆசிய அணிகள் என்றால் தொலைக்காட்சி ரேட்டிங்கை வர்த்தகமாக்கலாம் என்ற எண்ணத்துடன் இதனை மீண்டும் கொண்டுவந்தது. அதற்கு காரணமாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அப்போது தெரிவித்தது என்னவெனில், ஆஸ்ட்ரேலியா இல்லாத மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளில் குறிப்பாக பலமான் ஆசிய அணிகள் மோதினால் டிவி ரேட்டிங் அதிகரிக்கும் அதனைக் காசு பண்ணவே இந்த முறை முத்தரப்பு தொடர் நடத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில் இந்திய, ஆஸ்ட்ரேலிய இறுதிப் போட்டி என்றால்தான் இப்பகுதியில் மேலும் சில தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பிற்கான ஒப்பந்தங்கள் கைகூடும், மேலும் இந்தியா, இறுதிப்போட்டியில் விளையாடினால் டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் அது முதலிடம் பெறும்.

FILE
இதனால்தான் அன்று இலங்கையின் 320 ரன்களை இந்தியா 37 ஓவர்களில் துரத்தியது கூட சந்தேகத்தைக் கிளப்புகிறது. அன்று மலிங்கா பந்து வீசினாரா அல்லது சும்மா விட்டெறிந்தாரா என்ற சந்தேகம் எழுவது நியாயமே. 7.4 ஓவர்களில் 96 ரன்கள் கொடுக்கும் அளவுக்கு அவர் மோசமான வீச்சாளர் கிடையாது. அதுவும் அன்று ஜெயவர்தனே தனது பவுலிங் பவர் பிளேயை தாமதமாக்கியதும் இந்தியாவுக்கு சாதகமான முடிவாகவே இருந்தது. தொடர்ந்து பேட்டிங் பவர் பிளேயும் எடுக்கப்பட 10 ஓவர்கள் பவர் பிளே என்றால் இலக்கு சுலபமாக முடிந்து போனது.

அந்தப் போட்டியில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தால் இலங்கை, ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் வணிக மதிப்பு, தொலைக்காட்சி பார்வையாளர்கள் ரேட்டிங் எகிறும் என்பதைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீன்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

இன்றும் கூட துவக்கத்திலிருந்தே இலங்கை இந்திய அணிக்கு சார்பாக ஆடுவது போல் தெரிய, ஆஸ்ட்ரேலியாவோ இலங்கை அணிக்குச் சார்பாக விளையாடியது போல் தோன்றியது தவிர்க்க முடியாததே.

நமது சந்தேகம் இதுதான்:

இந்தியாவை இறுதிக்குள் வரச் செய்வதற்காக இலங்கையை சரி கட்டியிருந்தால், அது ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு பிடித்தமானதாக இல்லாமல் போகவோ அல்லது இந்தியாவை இறுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற பொதுவான ஒரு எண்ணமோ ஆஸ்ட்ரேலியாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆஸ்ட்ரேலியா வேண்டுமென்றே இந்தப் போட்டியில் தோல்வியுறுவோம் என்று முடிவெடுத்திருந்தால் தங்களது கிரிக்கெட் உணர்வையும் மீறி செயல்பட்டதாக பொருள்- அது அப்படித்தானா?

அல்லது வணிக நலன்களுக்காக இந்தியாவை இறுதிக்குள் நுழையச்செய்ய ஏற்படுத்தபட்டத் திட்டத்தை கீழறுப்பு (Subvert) வேலை செய்து ஆஸ்ட்ரேலியா தோல்வி தழுவியதா?

இலங்கை இந்தியாவுக்காக விளையாட, ஆஸ்ட்ரேலியா இலங்கைக்காக விளையாடியதா என்ற சந்தேகத்தை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளது இன்றைய ஆஸ்ட்ரேலிய தோல்வி ஆட்டம்.

இது இப்போதைக்கு ஓய்ந்தது போலவும் முடிந்து விட்டது போலவும் தோன்றினாலும் நிச்சயம் இந்தச் சர்ச்சை பின்னாளில் ஏற்படலாம், அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் கூட ஏற்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் ஒன்றை நாம் உறுதியாகக் கூறுவது சிறந்தது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இலங்கைதான் தகுதியான அணி. ஏனெனில் அந்த அணி ஆஸ்ட்ரேலியாவை இந்தப் போட்டிக்கு முன் இந்தத் தொடரில் 2- 1 என்று வெற்றி பெற்றிருந்தது.

சாதாரண இலக்கைக் கூட தொய்வில்லாமல் டென்ஷன் இல்லாமல் துரத்த முடியாமல் திணறி வந்த இந்திய அணி ஒரு 321 ரன்கள் இலக்கை திடீரென துரத்தி வெற்றி பெற்றதாலேயே இந்த அணி இறுதிக்குள் நுழைய தகுதி பெற்ற அணி என்று நாம் கருதலாகாது.

வெப்துனியாவைப் படிக்கவும்