விஜய், அட்லி படம் எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா?

புதன், 1 மார்ச் 2017 (10:24 IST)
விஜய்யின் 61 -வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். சென்னையை அடுத்த பனையூரில் சென்ற மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக முதல் ஷெட்யூல்டை முடித்துள்ளார்கள்.

 
அட்லி படம் என்றதும் உடனே எழும் கேள்வி, எந்தப் படத்தில் தழுவலாக இருக்கும்?
 
அட்லியின் முதல் படம் ராஜா ராணி மவுனராகம், மற்றும் கன்னட படமொன்றின் தழுவல். இரண்டு படங்களின் காட்சிகளை சற்றே மாற்றி இந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி எடுத்திருந்தார். மவுனராகத்தில் கார்த்திக் ரேவதியை கலாய்த்தால் இதில்  அப்படியே உல்டா. நயன்தாரா ஜெய்யை கலாய்த்தார்.
 
அட்லியின் இரண்டாவது படம் தெறி பூஜை போட்ட போதே சத்ரியன் படத்தின் தழுவல் என்பது தெரிய வந்தது. மனைவியை இழந்த முன்னாள் போலீஸ்காரர் மீண்டும் டியூட்டியில் சேர்ந்து பழைய வில்லனை பழிவாங்கும் கதை. தெறியில் இது எதுவும்  மிஸ்ஸாகவில்லை. கேரளா என்ற லொகேஷனும் காட்சிகளும் மட்டும் புதுசு.
 
விஜய்யை வைத்து அவர் இயக்கிவரும் படமும் அண்ணாமலை படத்தின் இன்ஸ்பிரேஷன் என கூறப்பட்டது. படக்குழுவிடம் நெருங்கி விசாரித்ததில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. முக்கியமான இரு ரஜினி படங்களின் கலவையே இந்தப் புதுப்படம்.
 
ரஜினி நடிப்பில் 1982 -இல் வெளியான படம், மூன்று முகம். ஏ.ஜகந்நாதன் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த  படம். போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் சிவாஜியின் தங்கப்பதக்கம் கதாபாத்திரம் போல் இன்றும் பிரகாசம் குறையாமல் உள்ளது. அந்தப் படத்தையும், 1992 -இல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட்  படமான அண்ணாமலையையும் இணைத்து அட்லி தனது படத்தை எடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரம் கூறியுள்ளது.
 
மதுரைப் பின்னணியில் விஜய் தாடியுடன் நடித்திருக்கும் முதல் ஷெட்யூல்ட் காட்சிகள் பிளாஷ்பேக்கில் வருகின்றன.  அண்ணாமலை ரஜினியின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வேடம் இது என்கிறார்கள். பண்ணை வைத்திருக்கும் இந்த விஜய்யின் இரு மகன்களாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவிருக்கிறாராம். அதில் ஒன்று ரஜினியின் மூன்று முகம்  அலெக்ஸ் பாண்டியனை பிரதிபலிக்கும் டேரிங்கான வேடமாம். ஆளுக்கு ஒரு நாயகி என்ற விதத்தில் மூன்று நாயகிகள்.
 
தெறியில் கதையை கேரளாவுக்கு நகர்த்தி போய் சத்ரியன் வாடை தெரியாது பூசியதுபோல், இந்தப் படத்தில் பல்கேரியாவில்  சில காட்சிகளை எடுக்கவிருக்கிறார்கள்.
 
நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100 -வது படமாக இது தயாராகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்