கபடி விளையாட்டில் மூச்சு விடாமல் கபாடி சொல்வது போல், தமிழ் மீடியாக்கள் கபாலியை ஜெபிக்கின்றன. அந்த தேசிய நீரோட்டத்தில் இதோ நாமும் ஐக்கியமாகிவிட்டோம்.
கபாலி....
கபாலி படத்தின் டிக்கெட்கள் உடனடியாக விற்றுத் தீர்ந்ததை மாலை செய்தித்தாள்கள் போஸ்டர் ஒட்டியும், தலைப்பு செய்தியாக்கியும் மகிழ்ந்தன. இணையம்வழி திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தனியார் இணையதளங்களை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
டிக்கெட்நியூ தளத்தில் குறைந்தது முப்பது திரையரங்குகளில் முன்பதிவு செய்யலாம். கபாலிக்கு வெறும் நான்கே திரையரங்குகள். மற்ற திரையரங்குகள் என்னவாயின?
இணையத்தில் முன்பதிவு செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்துக்கு மேல் வசூலிக்க முடியாது. மேலும், அது அதிகாரப்பூர்வமாக பதிவாகிவிடும். அதனால், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டை விற்கும் திரையரங்குகள் இணைய முன்பதிவை ரத்து செய்துவிட்டன. டிக்கெட் கவுண்டரிலேயே முதல்நாள் டிக்கெட்கள் 500 முதல் 1000 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.
மகிழ்ச்சி.
கபாலி...
பாகுபலியைவிட கபாலி பெரிய படம் என்று தாணு கூறியிருக்கிறார். படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை மற்றும் வசூலாகும் தொகை ஆகியவற்றை வைத்து அவர் இப்படி கூறியுள்ளார். மேலும், இது ரஜினி படம், அதனால் பாகுபலியைவிட பெரியது என்பது அவரது கூற்று.
கபாலி வெளியாகும் முன்பே 200 கோடி ரூபாய்கள் வசூலித்துவிட்டதாகவும், வெளியான பிறகு 500 கோடிகளை வசூலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தனைக்கும் கபாலி தொலைக்காட்சி உரிமையை அவர் இன்னும் விற்கவில்லையாம் (அப்போ, ஜெயா தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது?) அந்தத் தொகையும் சேர்ந்தால் படத்தின் வியாபாரம் எங்கேயோ போய்விடும்.
இந்திய சினிமாவில் இதற்கு மேல் பிரமாண்டமான படம் தயாரிக்க முடியாது என்று நினைத்தாரோ தெரியவில்லை, அடுத்த படம் ஹாலிவுட்தான் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
தாணு தயாரித்த தெறி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகவில்லை. மீறி வெளியிட்ட 10 திரையரங்குகளுக்கு செங்கல்பட்டு ஏhpயா விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவில்லை. இந்நிலையில், தாணு தயாரித்துள்ள கபாலி செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. அதனை ஏஜிஎஸ் உடைத்திருக்கிறது.
கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது. அதேபோல் கபாலியின் கோவை ஏரியா உரிமையை பெப்சி சிவா கைப்பற்றியுள்ளார். அனைத்து ஏரியாக்களும் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளன.
அதேபோல் கேரளாவில் மோகன்லால் கபாலியின் திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளார். 200 திரையரங்குகளுக்கு மேல் கபாலி அங்கு வெளியாகிறது.
கபாலி...
கபாலி வெளியாகிற அதேநாள் இந்தியில் இர்பான் கான் நடித்திருக்கும் மதாரி வெளியாகிறது. இந்தப் படத்தின் போஸ்டர் டிசைனை ரஜினி ரசிகர்கள் காப்பியடித்து கபாலி போஸ்டiர டிசைன் செய்ததும், அது அதிகாரப்பூர்வ கபாலி போஸ்டர் என நினைத்து இர்பான் கான் கமெண்ட் செய்ததும் மறந்திருக்காது.
மதாரி பிரமோஷனுக்கு வந்த இர்பானிடம் உங்க படம் வெளியாகிற அதேநாள் கபாலி வெளியாகிறதே, கபாலிக்கு நீங்க போட்டியா என்று தரியை கொளுத்திப் போட்டனர். பதறிப்போனவர், அப்படியெல்லாம் இல்லை. எங்க படம் செலவு செய்ததுக்கு கொஞ்சம் மேல வசூலித்தால் போதும். ரஜினியுடன் போட்டி போட நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும் என்றார்.
அத்துடன், ஒரு மனிதராக ரஜினியை எனக்குப் பிடிக்கும், அவரை மதிக்கிறேன் என்றும் கூறினார்.
இதே வசனத்தை அவர் இதற்கு முன்பும் கூறியிருந்தார். ரஜினி குறித்து கேட்கும் போதெல்லாம் இதனை அவர் கூறுகிறார். ரஜினியை மனிதராகதான் பிடிக்கும், நடிகராக பிடிக்காது என்பதை இப்படி நாசூக்காக தெரியப்படுத்துகிறாரோ?
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்