சட்டமன்ற தேர்தலில் விஜய் யார் பக்கம்?

சனி, 7 மே 2016 (11:44 IST)
மே 16 நடக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் குழப்பமான நிலையே நீடிக்கிறது.


 


அதிமுக எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் நட்சத்திரங்களை களமிறக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.
 
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கே அம்மாதான் அறிவுரை சொல்கிறார் என்று குண்டு கல்யாணமும், அம்மா கொடுத்த ஆடு குட்டிப் போடும், கருணாநிதி தந்த டிவி குட்டி போடுமா என்று ராமராஜனும் தொகுதிதோறும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பச்சரிசி புழுங்கலரிசி வாய்க்கரிசி... என்று எதுகை மோனையோடு இவர்களுக்கு நான் சளைத்தவளில்லை என்று விந்தியாவும் பட்டையை கிளப்புகிறார். இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்களா இல்லை லொள்ளு சபா நடத்துகிறார்களா என்று அறிய முடியாத அளவுக்கு நகைச்சுவை கரைபுரண்டு ஓடுகிறது.
 
சென்ற தேர்தலில் வடிவேலுக்கு ஏற்பட்ட நிலைமையால் நட்சத்திரங்களை திமுக அண்டவிடவில்லை. இதனை, திமுகவை நட்சத்திரங்கள் யாரும் அண்டவில்லை எனவும் எடுத்துக் கொள்ளலாம். காங்கிரசில் குஷ்பு சகல இடங்களிலும் சிலம்பாட, நமிதா அலை இன்னும் பெரிதாக கிளம்பவில்லை என நமிதா ரசிகர்கள் கவலை கொள்கிறார்கள்.
 
உதிரிகள் நிறைய களத்தில் இருந்தாலும் சென்ற தேர்தலில் அம்மாவுக்கு அணில் மாதிரி உதவி செய்த நம்ம தெறி நாயகர் இந்தமுறை யாருக்கு எந்த மாதிரி உதவப் போகிறார் என்பதை அறிய தமிழகம் ஆவல் கொண்டுள்ளது.
 
விஜய் ஆரம்பத்திலேயே திமுக அனுதாபி. அப்படித்தானே இருந்தாக வேண்டும். பல அரசு விழாக்களில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். பிறகு இந்திய அளவில் இறங்கி அடிக்க அவர் ராகுல் காந்தியை சந்தித்தது கடந்தகால வரலாறு.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க..........

சன் சகோதரர்கள், 'நாங்கதாண்டா தமிழ் சினிமா' என்ற சர்வாதிகாரத்தில் வூடுகட்டி அடித்ததில் விஜயின் காவலன் படத்துக்கு பெருங்காயம். படம் வெளிவருமா என்பதே கடைசிவரை சந்தேகமாயிருந்தது. உடன் இருந்த நமக்கே உடுக்கடியா என்றுதான் ஜெயலலிதாவுக்காக அணில் மாதிரி உதவி செய்ய விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் முடிவெடுத்தனர். ரசிகர் மன்றங்களையும் களத்தில் இறக்கினர். அம்மாவும் வென்றார். தகுந்த எதிர்விருந்தை தந்தையும், மகனும் எதிர்பார்த்தனர். 
 
வீங்கி பெருத்த ஈகோ பேக்டரியிடம் இதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்ற அடிப்படை ஞானம் அவர்களுக்கு இல்லை. திமுக ஆட்சியில் படத்தைதான் வெளியிட முடியவில்லை. அதிமுக ஆட்சியில் படத்தை வெளியிட முடியாததுடன் நிம்மதியாக கேக் வெட்டி பிறந்தநாள்கூட கொண்டாட முடியவில்லை. அதற்குப் பிறகுதான் ஆஹா, சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்தோமே என்று தந்தையும் மகனும் நிலவரத்தை உணர்ந்தனர்.
 
இந்தமுறை திமுகவே பெட்டர் என்ற எண்ணத்துக்கு தளபதியும், தளபதியின் தந்தையும் வந்திருக்கின்றனர். தளபதியிடமிருந்து வெளிப்படையாக உத்தரவு எதுவும் வரவில்லை என்றாலும், பல இடங்களில் அவரது ரசிகர் மன்றங்கள் வெளிப்படையாக திமுக வேட்பாளர்களை ஆதரிக்க ஆரம்பித்துள்ளன. தலைமையின் தலையசையாமல் வால் ஆடாது என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். 

ஆக, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அணிலாக இல்லாமல் அன்நோவன் மேனாக புறமிருந்து திமுகவை ஆதரிக்க விஜய் விரும்பியதாகவே இதுவரையான நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
 
கபாலி, 2.0 படங்கள் வெளியாகவிருப்பதால் சூப்பர் ஸ்டார் இந்த தேர்தலில் வாய் திறக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.
 
ம்... நடிகர்களைப் பற்றி நல்லாவே தொரிஞ்சு வச்சிருக்காங்க.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்