கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்...!!

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று  கூறப்படுகிறது.

 
கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது.
 
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார். வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளதை வைக்கவேண்டும்.
 
முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆகவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன்  மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.
 
வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப்படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றபடுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று  முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
 
அன்றைய தினம் பிரதோச வேளைக்கு பின் நோன்புக் கயிறு கட்டப்படுகிறது. நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப்பட்டப்பகுதியில் அணியப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர்.
 
முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு பூஜையின் மறுநாள் நீர்நிலைகளில் விடப்படுகிறது. தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்