மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் வரம் பெற்று இருந்ததால் அவர் ஜீவன் பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம் ‘நான் என்ன பாவம் செய்தேன்.
என் உயிர் போகவில்லையே’ என்று மனம் வருந்தினார். அதற்கு வியாசர் ‘ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் தான்’ என்றார். உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை துச்சாதனன் துகில் உரித்த போது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. ‘இதற்கு விமோசனம் இல்லையா?’ என்று கேட்டார்.
அதற்கு வியாசர் ‘எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி’ என்றார் வியாசர். பின்னர் எருக்க இலை ஒன்றை காட்டி ‘எருக்கஇலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் உள்ளது. ஆகவே அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன்’ என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால் அமைதியாக இருந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று உயிர் நீத்தார்.
பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இது குறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் ‘சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிப்பார்கள்.
ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். அதனால் தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது.