எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்க உகந்தது தெரியுமா....?

புதன், 15 டிசம்பர் 2021 (14:33 IST)
ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் 9 முறை சரியாக சூரிய உதயத்தில் பாராயணம் செய்து வழிபடலாம். 

திங்கட்கிழமை: திங்கட்கிழமை சிவபெருமானுக்கு சோமவார விரதம் இருப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சோமவாரத்தில் விரதம் இருந்தால் அளவில்லாத நற்பலன்களை பெறலாம். 
 
செவ்வாய்க்கிழமை: மௌன அங்காரக விரதம் இருக்க அருமையான நாள். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மையைப் பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று ஸ்கந்த கடவுளை வழிபடுவது நல்லது. 
 
புதன்கிழமை: புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, புகழ், செல்வம் கிடைக்கும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை பெருமாள் நரஸிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு. 
 
வியாழக்கிழமை: வியாழக்கிழமை ஸ்ரீராகவேந்திரர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். சாய் பாபாவின் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.  நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு பகவானுக்கு கொண்டக்கடலை மாலை மஞ்சள் வஸ்த்ரம் அணிவித்து வணங்குவது சிறப்பு. 
 
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை மஹாலஷ்மி மற்றும் அம்பாளுக்கு உகந்த நாள். சிவாலயத்தில் உள்ள பார்வதி தேவிக்கும் பெருமாள் கோவிலில் உள்ள மஹாலஷ்மிக்கும் அர்ச்சனை செய்து வழிபடலாம். 
 
சனிக்கிழமை: சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி கருநீல வஸ்திரம் அணிவித்து ஊனமுற்ற குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவவேண்டும். அப்படி செய்தால் சனிபகவானின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். மேலும் பெருமாளுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது குல விருத்தியாகும். சனிபகவானின் கெடுபலன்கள் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்