சங்க காலத்தில் சாதியும் இல்லை, சண்டையும் இல்லை: முனைவர் சிலம்பொலி செல்லப்பன்

ஞாயிறு, 14 ஜூலை 2013 (12:29 IST)
சங்க காலத்தில் சாதியும் இல்லை, சண்டையும் இல்லை என்றார் முனைவர் சிலம்பொலி செல்லப்பன்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய "வியக்க வைக்கும் தமிழர் காதல்', "ஆஸ்திரேலிய ஆதிவாசி கதைகள்' என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

"வெளிநாடுகளில் தமிழ்க் கூட்டங்கள் அரங்கு நிறைந்தவையாக நடைபெற்று வரும்போது, இங்கு மட்டும் ஏன் நம்மால் அதைச் செய்ய முடியவில்லை? தொலைக்காட்சிப் பெட்டியும், திரைப்படங்களும் நம்மை சிறை வைத்திருக்கின்றன. ஒரு பத்தாண்டுகளுக்கு தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் தடை செய்தால், தமிழ்ச் சமூகம் முன்னேற்றமடையும்.

ஆஸ்திரேலியாவில் சிலப்பதிகார மாநாடு நடத்த முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை சிலப்பதிகார மாநாடு நடத்தப்படவில்லையே ஏன்? இனி அடுத்தத் திட்டம் சிலப்பதிகார மாநாடுதான். ஆண்டுதோறும் சிலப்பதிகார மாநாடு நடத்தத் திட்டமிடுவோம்.

உலகக் காதல் இலக்கியங்களுக்கு முன்னோடி, சங்கத் தமிழ்க் காதல். இயற்கையோடு ஒன்றி இலக்கியம் படைத்தவர்கள் சங்கத் தமிழர்கள். சங்க காலத்தில் சாதியும் இல்லை, சண்டையும் இல்லை.

லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் இளைஞர்களை தமிழ் இலக்கியம் பக்கம் ஈர்க்க முடியும்போது, இங்கே தமிழ்நாட்டிலும் இளைஞர்களை இலக்கியம் பக்கம் ஈர்க்க முடியும். அதற்கான பணிகளை மேற்கொள்வோம்' என்றார் சிலம்பொலி செல்லப்பன்.

ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை சோமு பேசியது:

"1983-க்குப் பிறகு இலங்கையில் இருந்து மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களின் இலக்கியம்தான் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம். நாங்கள், தமிழ்நாட்டை ஒரு ஜெருசலமைப் போல, மெக்காவைப் போல மதிக்கிறோம்.

ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் ஒரு தமிழ்ப் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது. இங்கே அகதி என்றச் சொல் இன்னமும் மாறவே இல்லையே ஏன்?

ஆஸ்திரேலியாவில் அழித்தொழிக்கப்பட்ட அந்த நாட்டின் தொல்குடி மக்கள் இப்போதைய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதவிகிதம்தான். ஆனால், அவர்கள் எந்த நிலையிலும் தங்களின் பண்பாடு அழிந்துபோய்விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

எனவே, நம்முடைய நேரத்தையும், மூளையையும் திருடும் தொலைக்காட்சியை விட்டொழித்து, தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாப்பில் அனைவரும் முன்நிற்க வேண்டும்' என்றார் சோமு.

விழாவுக்கு திருக்குறள் கல்வி மையத் தலைவர் சு. முருகானந்தம் தலைமை வகித்தார். இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம், பாவாணர் தமிழியக்க அமைப்பாளர் முனைவர் பி. தமிழகன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை பேராசிரியர் சா. உதயசூரியன், தணிக்கை அறிஞர் மு. குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கவிஞர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். முடிவில், தி.ம. சரவணன் நன்றி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்