காசி ஆனந்தனின் ‘தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்’ பாடல் குறுவட்டு வெளியீடு
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (20:47 IST)
FILE
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் எழுதி, பாடகர் டி.எல்.மகராசன் பாடிய ‘தமிழ் எங்கள் உயரிலும் மேலாகும்’ என்ற பாடல்கள் கொண்ட குறுவட்டு சென்னையில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை, அண்ணாசாலை ராணி சீதை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெளியீட்டு விழாவில், மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலர் வைகோ பாடல் குறுவட்டை வெளியிட, அதனை புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசனின் அண்ணனும், தஞ்சை மருதப்பா அறக்கட்டளையின் செயலருமான சாமிநாதன் ரூ.1 இலட்சம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாகவே இந்தப் பாடல் குறுவட்டு வெளியிடப்பட்டது.
தலைமை உரையாற்றிய பழ.நெடுமாறன், ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு காலகட்டங்களில் எப்படியெல்லாம் நடந்துகொண்டார் என்பதை தேதி வாரியாக குறிப்பிட்டு, அவருடைய ஒவ்வொரு செய்கையும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிரானதாகவே இருந்தது என்பதையும் கூறி, தமிழினத்திற்கு அவர் செய்த துரோகங்களை இன்றைக்கு மட்டுமல்ல, வரலாற்றிலும் தமிழினம் மன்னிக்காது என்றார்.
ஈழத் தமிழ்ப் போராளிகளிடையே சகோதர யுத்தம் நடந்ததே ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணம் என்று கருணாநிதி தொடர்ந்து கூறிவருவதைச் சுட்டிக்காட்டிய நெடுமாறன், “உங்களது வீட்டில் நடக்கும் சகோதர யுத்தத்திற்கு தீர்வு கண்டுவிட்டு, பிறகு போராளிகளுக்கு இடையே நடந்த யுத்தத்தைப் பற்றிப் பேசுங்கள்” என்று கூறியது மட்டுமின்றி, ஈழப் போராளிகளுக்கு இடையே நடந்த சகோதர மோதலின் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ இருந்தது கருணாநிதிக்குத் தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
கருணாநிதியின் வற்புறுத்தலினாலேயே தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை வரவேற்பதாக அறிக்கை விட்டேன் என்று தன்னிடம் தமிழர் ஐக்கிய கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூறினார் என்று கூறிய நெடுமாறன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எப்போதும் ஒரு காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி செயல்பட்டு வந்தார் என்று கூறினார்.
காசி ஆனந்தன் எழுதிய பாடல்கள், உணர்வுப் பூர்வமாக டி.எல்.மகராசன் பாடியுள்ளார் என்று பாராட்டி பேசிய வைகோ, இப்பாடல் தொகுப்பு ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்கத் தக்கது என்று கூறினார்.
காசி ஆனந்தனும், அவருடைய குடும்பமும் ஈழ விடுதலைக்கு செய்த தியாகங்களை பட்டியலிட்ட வைகோ, மகாகவி பாரதியார், பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்தனார், கண்ணதாசன் ஆகியோருக்குப் பிறகு தமிழினம் கண்ட பெரும் கவி காசி ஆனந்தன் என்று புகழ்ந்துரைத்தார்.
‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்ற காசி ஆனந்தனின் ஒரு பாடலை சுட்டிக்காட்டிப் பேசிய வைகோ, “ஆம், பிரபாகரன் வாழ்கிறார். இந்தப் பூமிப் பந்தில் ஒரு மூலையில் இருக்கிறார். ஒரு நாள் வெளிப்பட்டு தமிழீழத்தை மலர வைப்பார்” என்று கூறியபோது, அரங்கில் எழுந்த மகிழ்வொலி வெகு நேரம் நீடித்தது.
ஏற்புரை நிகழ்த்திய உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், ஒரு ஏதிலியாக தமிழ்நாட்டில் தாங்கள் வாழ்ந்து சந்தித்த இன்னல்களை கூறினார். தமிழிற்கு ஆபத்து உள்ளது என்று கூறிய கவிஞர், தூய தமிழில் பேசுமாறும், எழுதுமாறும் கேட்டுக் கொண்டார்.
அ.இ.அ.தி.மு.க.வின் இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையா, ஓவியர் சந்தானம், உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் கதிரேசன், தாய்மண் பதிப்பதக்கத்தின் நிறுவனர் இளவழகன் ஆகியோர் பேசினர். விடுதலை வேந்தன் விழா நிகழ்வுகளை மிகச் சிறப்பாக மொழிந்து இறுதியில் நன்றி நவின்றார்.
‘தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்’ என்ற இந்தப் பாடல் குறுவட்டில், அலை கடல் ஓரம் நிலா எழும் நேரம், தனித்தமிழ் பேசம்மா இனிக்கும், சின்ன மகளே சின்ன மகளே, தமிழே உனை நான் தொழுகின்றேன், தமிழா, நீ தமிழ் வாழ பணியாற்று, தேன் தமிழோடு நான் கலந்தேன், தமிழே! உனக்கு நிகர் தமிழே ஆகிய 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.