விபத்து என்றால் அது சாலை விதிகளை மீறுவதாலும், மிதமிஞ்சிய வேகத்தில் வாகனம் செலுத்தப்படுதாலும், குறுகிய சாலையில் எதிரும் புதிருமாக வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொள்வதாலும் மட்டுமே ஏற்படுவதாக செய்திகளில் இருந்து நாம் அறிந்துவருகிறோம்.
ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்திற்கும் மேலாக அது வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளில் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏற்படுகிறது என்பதை ‘அதிகாலை’ எனு்ம் குறும்படத்தின் மூலம் கவின் ஆண்டனி காட்டியுள்ளார்.
FILE
‘அதிகாலை’ என்று இவர் பெயர் வைத்திருக்கும் காரணம் புரிந்துகொள்ளக் கூடியதே. பொதுவாக சாலை விபத்துகள் ஏற்படும் நேரம் அது. நீண்ட தூரம் வாகனத்தைச் செலுத்தி வரும் ஓட்டுனர், அந்த அதிகாலை வேளையில் களைப்பு மிகுதியால் தூங்கம் கண்ணைச் சூழ்ந்து அழுத்த, அப்போது கட்டுப்பாடு தவறுவதால் எதிரில் வரும் வாகனத்துடனோ அல்லது முன்னால் செல்லும் வாகனத்துடனோ அல்லது (பனிக் காலங்களில்) முன்னால் நின்றுக் கொண்டிருக்கும் வாகனத்துடனோ மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்திற்கும் அதிகாலைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஆனால் கவின் ஆண்டனியின் ‘அதிகாலை’ முற்றிலும் வேறுபட்டது. தகவல் தொழில் துட்ப (ஐ.டி) பட்டம் பெற்ற இளைஞரான கெளதம், திறமையினால் குழுத் தலைவர் (Team Leader) என்ற அளவிற்கு உயர்கிறார். வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
கடன் பெற்று பல்குடியிருப்பில் ஒரு இல்லத்தையும் வாங்குகிறார். கார் வாங்கி அதில் அன்றாடம் அலுவலகம் சென்று திரும்புகிறார். தங்கையின் படிப்பு முடித்து அவளுக்கு நிறைவாக மணம் முடித்து பார்க்க திட்டமிடுகிறார்.
இதற்கிடையே அவருக்கும் ஒரு காதலி வாய்க்கிறார். மகிழ்ச்சியாக போகும் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பணிக்கு திடீரென்று ஆபத்து ஏற்படுகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி அவருடைய நிறுவனத்தின் பணி வரவைப் பாதிக்கிறது. ஆட்குறைப்பு செய்ய முற்படுகிறது நிர்வாகம். கெளதம் மட்டுமின்றி, அவருக்குக் கீழ் பணியாற்றும் இளைஞர்களின் பணிகளையும் பறிக்கிறது. தடுக்க முடியாமலும், வேறு வழி புரியாமலும் தவிக்கிறார்.
‘ஏன் என்னோடு பேசுவதில்லை’ என்று கைபேசியில் அழைத்த காதலியை அன்புடன் கோபிக்கிறான். பிரச்சனையைக் கூற விருப்பமற்றவனாய் மழுப்புகிறான். அம்மா, தங்கைக்கு ஏமாற்றத்தை தர விரும்பவில்லை. தான் பணியாற்றிய நிறுவனத்தில் கடைசி பணி நாள். அன்று நீண்ட நாள் இருந்து, இரவையும் கழித்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி தனது வாகனத்தை செலுத்துகிறான் கெளதம்.
பொழுது புலரும் அந்த வேளை, அவனுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது.
கனத்த இதயம் கொண்டவனை, அசதியும் அழுத்துகிறது. விழிப்பற்ற மன நிலையை கவலை கவ்வ - அந்த ஒரு நொடியில் சாலையை கடக்க முயன்ற ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதுகிறது கெளதமின் கார்...
மீனவச் சேரியில் அந்த இளைஞனின் வாழ்க்கைக்கு ஒரு குறையும் இருப்பதாக அவன் அறியவில்லை. மீனை ஏலத்திற்கு எடுத்து அருகில் உள்ள தெருச் சந்தையில் விற்று, அதில் வரும் வருவாயில் தனது தந்தையையும் காப்பாற்றிக் கொண்டு கெளரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் தேசப்பன். இயற்கை அளிக்கும் இளமைக் கொடை தேசப்பனுக்கும் போதுமான அளவிற்கு இருந்தது. பிறகென்ன... அவனுக்கு ஒரு சேரி மயில் காதலி.. எல்லாம் பார்வையில்தான்.. அன்றாடத் தொடராக காதலும் தொடர்கிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை, முற்றுப் புள்ளி விழுகிறது.
FILE
அவர்கள் வாழ்ந்த சேரிப்பகுதியை கையகப்படுத்த அரசு உத்தரவிடுகிறது. வாக்களித்த தங்களின் வாழ்விற்கு வேட்டு வைப்பதா என்று தேசப்பனும் இளைஞர்களும் கிளர்ந்தெழுகின்றனர். போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலையில், ஒரு நாள் அவனுடைய அப்பா அரசு அலுவலகதிதற்குச் சென்று கையெழுத்திட்டுவிட்டு வருகிறார். “இது என்ன நாம் சம்பாதித்து வாங்கிய இடமா, என்றைக்கிருந்தாலும் போக வேண்டியதுதானே” என்று தகப்பன் கூற, எல்லாம் இடிந்து தலைமேல் விழுந்தது போல் தேசப்பன் அதிர்ந்து போகிறான். அவர்களுக்காக ஆசிர்வதிக்கப்பட்ட சேரி வாழ்க்கையும் பறிக்கப்பட்டதை உணர்ந்த தேசப்பனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. இரவு முழுவதும் சிந்தனை... ஏதாவது செய்தாக வேண்டுமே.. என்ன செய்வது என்று இரவு முழுவதும் சிந்தித்தவன், தனது நண்பர்களை திரட்ட அதிகாலையில் தனது இரு சக்கர வாகனத்துடன் புறப்பட்டு சாலைக்கு வருகிறான்.
அப்போது வேகமாக வந்த அந்த கார் அவன் இரு சக்கர வாகனத்தின் மீது மோத... கெளதம், தேசப்பன் ஆகிய இரண்டு உழைப்புலகங்களின் வாழ்க்கை அந்த அதிகாலையில் முடிவிற்கு வருகிறது.
இரண்டு உயிர்களைக் குடித்த அந்த அதிகாலை விபத்தின் பின்னணி - இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவின் தாக்கமும், பொருளாதார உலகமயமாக்கலும் என்பதையும், அது அந்த இளைஞர்களை வெவ்வேறு வகைகளில் எவ்வாறு பாதித்தது என்பதையும் மிகுந்த கலை நயத்துடன் படமாக்கியுள்ளார் கவின் ஆண்டனி.
இந்த குறும்படத்தை பார்த்து முடித்தபோது, அது விபத்தை மட்டும் பேசவில்லை.... விபத்திற்கு முன் விபத்தாகிப் போன தேச வாழ்வையும் இரண்டு இளைஞர்களின் வாழ்விலிருந்து பேசுகிறது.
தனது வாழ்வைப் பாதித்த விபத்தை, சமூகத்திற்கு ஒரு வழிகாட்டலாக தனது கலைத் திறனால் அளித்துள்ளார் கவின் ஆண்டனி.
கவின் ஆண்டனியுடன் கலைத் திறன் கொண்ட ஒரு இளைய பட்டாளமே இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். மஸ்தான், ஆக்ஸ்லெனியோ, ஆலன், ஆர். முத்துக்குமரன், விஜய் ரத்தினம், நிஜார், ரதன்... என்று எல்லோரின் திறனும் வெளிப்பட்டுள்ளது.
நமது வீட்டின் நூலக்கத்தில் நிரந்தரமாக இடம் பெறத்தக்க குறும்படம் இது.