மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (14:19 IST)
மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள் கிழமை தொடங்கியது. இதில் முக்கியமாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி தங்க சப்பர வாகனம், பூத, அன்ன வாகனம், ஏப்ரல் 10-ம் தேதி தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம்,  காமதேனு வாகனம், ஏப்ரல் 11-ம் தேதி தங்கப்பல்லக்கு வாகனம், ஏப்ரல் 12-ம் தேதி தங்க சப்பர வாகனம், தங்கக் குதிரை வாகனம், 13-ம் தேதி  தங்கம், வெள்ளி ரிஷப வாகனம், 14-ம் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம், 15-ம் தேதி பட்டாபிஷேகமும், 16-ம் தேதி திக்  விஜயமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ம் தேதி காலை நடைபெறுகிறது. பின் இரவு 8 மணிக்கு  கல்யாணக் கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து ஏப்ரல் 18-ம் தேதி காலை  5.45 மணிக்கு சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
 
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர்  கோலத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் ஏப்ரல் 17 புதன்கிழமை மாலை மதுரைக்கு புறப்பட்ட அழகர் சுந்தர்ராஜபட்டியில் உள்ள மறவர்  மண்டகப் படிக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30-மணிக்கு வந்து சேர்ந்தார். பின் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மதுரை மூன்றுமாவடி  பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நடைபெற்றது. 
 
வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை தரிசனம் செய்தனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்