மதுரையில் ஆதியோகி ரத யாத்திரை- ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:13 IST)
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மதுரைக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து ஆதியோகியின் அருளைப் பெற்றனர்.
 

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.

அதில் ஒரு ரதம் நேற்று (பிப். 13) மதுரை வந்தது. காலை 10 மணிக்கு காளவாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட ரதம் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் வழியாக மாலை திருமங்கலம் பகுதியை அடைந்தது. சென்ற இடங்களில் எல்லாம் பக்தர்கள் திரளாக கூடி ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்த ரத யாத்திரை வரும் 18-ம் தேதி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறவுள்ள ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் அழைக்கும் விதமாகவும், ஆதியோகி தரிசனத்தை அனைவருக்கும் வழங்குவதற்காகவும் நடைபெறுகிறது.

இந்த ரதம் இன்று (பிப். 14) ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், பிப். 15-ம் தேதி அண்ணாநகர், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளிலும் வலம் வரவுள்ளது. அதைத்தொடர்ந்து பிப். 16-ம் தேதி கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோயில் ஆகிய பகுதிகளிலும், பிப். 17-ம் தேதி மாட்டுத்தாவணி, புதூர், பி.பி.குளம் ஆகிய பகுதிகளிலும் வலம் வரவுள்ளது. பிப். 18-ம் தேதி மஹாசிவராத்திரியன்று காந்தி மியூசியத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக நிறுத்திவைக்கப்படும்.

கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே நேரில் தரிசனம் செய்வதற்கு இந்த யாத்திரை சிறந்த வாய்ப்பாக அமைந்தது என பக்தர்கள் தெரிவித்தனர். உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து  சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்