கூட்டணி இல்லையா ? கூட்டணிக்கு யாரும் வரவில்லையா ? – தினகரனின் தேர்தல் வியூகம்
திங்கள், 24 டிசம்பர் 2018 (09:12 IST)
மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கன்னியாக்குமரியில் ஊடகங்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா வழையில் அமமுக தனித்துப் போட்டியிடும் எனறும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுக இருக்கும் எனவும் அறிவித்தார்.
தினகரன் தனித்துப் போட்டியிடுவோம் எனக் கூறினாலும் அவர் மனதில் காங்கிரஸோடு கூட்டணி வைத்துப் போட்டியிட வேண்டும் என்றுதான் ஆசையாம். திமுக காங்கிரஸ் கூட்டணி உடைபடும் அதன் பின் காங்கிரஸோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் எனக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் தினகரன். ஆனால் ஸ்டாலின், கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துவிட்டார். அதனால் காங்கிர்ஸுடனான கூட்டணி சாத்தியமில்லாமல் போனது.
அதையடுத்து மற்றுமொரு தேசியக் கட்சியான பாஜக வோடு கூட்டணி வைப்பதில் தனிப்பட்ட முறையில் தினகரனுக்கு விருப்பமில்லையாம். சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியது, தன் மீதான கட்சி சின்னம் வழக்கு எனப் பலவற்றிற்கும் பின்னால் பாஜகதான் இருந்தது என்று தினகரன் வலுவாக நம்புவதால் பாஜக வோடு கூட்டணி இல்லை என முடிவு செய்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் பாஜக வோடு கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றும் அவருக்கு தெரியாதா என்ன?
அதிமுக – அமமுக இணைப்பில் அதிமுக பக்கம் இருந்து நல்லசைவுகள் வந்தாலும் தினகரன் அதற்கு எக்காலத்திலும் சம்மதிக்க மாட்டேன் என ஒரேக் குறியாக இருக்கிறாராம். மேலும் மற்றக் கட்சிகளான பாமக மற்றும் ம.நீ.ம ஆகிய எதாவது ஒருக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நினைத்தால் கமல் காங்கிரஸோடு சேரவே விருப்பம் காட்டுவதாகத் தெரிகிறது. மேலும் கமலுக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மற்றும் தினகரன் மீது பழைய பகைமுரண்கள் இருக்கின்றன. எனவே ம.நீ.ம. கூட்டணி சாத்தியமில்லை.
பா.ம.க தனது தேர்தல் முடிவு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. அன்புமணியும் அமமுக வோடு கூட்டணி அமைப்பதில் விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வேறு வழியில்லாமல்தான் தினகரன் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் செய்தி ஒன்று உலாவர ஆரம்பித்துள்ளது.