ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொன்ற விவகாரம்: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்!

வியாழன், 13 அக்டோபர் 2016 (22:39 IST)
நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து, சாத்தூர் படந்தால் பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் வந்த 2 இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 
 
திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளைஞர் ஒருவரை சுட்டுவிட்டு ஒருவர் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். குண்டு பாய்ந்த இளைஞர் இருக்கையில் இருந்தபடியே தலைகுப்புற சரிந்த நிலையில் இறந்தார். இதைப் பார்த்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். 
 
இதுபற்றி சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த இளைஞரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையின் மூலம் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி என்பவரது இளைய மகன் கருப்பசாமி (24) என்பது தெரியவந்தது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளை இடித்தது தொடர்பாக கருப்பசாமியின் அண்ணன்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில், கடந்த ஜூலை 2-ம் தேதி கோவில்பட்டியில் அப்துல்லா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 
 
இந்நிலையில், விடுமுறைக்காக கோவில்பட்டி வந்த கருப்பசாமி மீண்டும் நேற்று கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, அப்துல்லாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதத் தில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப் பட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், கருப்பசாமியை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என கருதப்படுபம் அப்துல்லாவின் தந்தை ரபீக் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
 
சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பசாமி, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். இவருக்கு கவிதா என்ற மனைவியும்  ஜனனி பிரியா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. மேலும், கவிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்