தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைய விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த, தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், அதன் தலைவராக, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐஜி அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சிறந்த உளவியலாளர் உட்பட ஐந்து பேர் கொண்ட ஆணையம் உருவாக்க இருப்பதாகவும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், கண்துடைப்புக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, அதன் பின்னர், தங்கள் தோல்வியை மறைக்க, மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தைத்தான் ஆட்சிக்கு வந்தது முதல் அரங்கேற்றி வருகிறது இந்தத் திறனற்ற திமுக அரசு.
அவசரச் சட்டம் கொண்டு வந்தும், அதனை முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.