குடிபோதையில் 65 வயது மூதாட்டியை கொலை செய்த வாலிபர்

வியாழன், 10 மார்ச் 2016 (18:05 IST)
நாங்குநேரி அருகே ஆடு மேய்த்த 65 வயது மூதாட்டியை கொலை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பனையன்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சங்கரம்மாள் (65). இவர், 2 நாட்களுக்கு முன் ஊருக்கு அருகே உள்ள வயல் வெளியில் ஆடுகள் மேய்க்கச் சென்றார்.
 
சம்பவத்தன்று சங்கரம்மாள் மாலை 5 மணியளவில், பனையன்குளம் அருகில் உள்ள கோவைகுளம் வயல் ஒன்றில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி மூன்றடைப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
செவ்வாய் மாலையில் இந்த கொலை வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த பலவேசம் மகன் பண்டாரம் (23) என்பவரை நாங்குநேரி காவல்துறை ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் தலைமையில் மூன்றடைப்பு காவல் துறையினர் பிடித்தனர்.
 
விசாரணையின்போது, அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ”நான் தினமும் கோவைகுளம் பகுதியில் மாடுகளை மேய்க்கச் செல்வேன். அப்பகுதிக்கு சங்கரம்மாளும் ஆடுகளை மேய்க்க வருவார். அப்போது எங்களுக்கு இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படும். அவர் என்னை அவதூறாக பேசுவார்.
 
சம்பவத்தன்றும் நான் மாடுகளை மேய்க்கச் சென்றபோது, அவரும் வந்தார். நான், அன்றையதினம் மது குடித்து இருந்தேன். வழக்கம் போல் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான் கையில் வைத்திருந்த கம்பால், அவரை சரமாரியாக தாக்கினேன். அவர் கதறி துடித்தவாறு சிறிது நேரத்திலேயே இறந்தார்.
 
அதைப் பார்த்த நான் பயந்து போய், அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்து விட்டேன். செவ்வாயன்று போலீசார் சந்தேகத்தின் பேரில் என்னை பிடித்து விசாரித்தனர். அப்போது சங்கரம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன்" என்று தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து அவரை மூன்றடைப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்