கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் வகுப்பு செல்போன் இல்லாததால் நித்யஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நித்யஸ்ரீ மற்றும் அவரது தங்கைகள் இருவருக்கும் தனித்தனியாக செல்போன் இருந்ததாகவும், ஆன்லைனில் படிப்பது தவிர்த்த மற்ற நேரங்களில் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்ட நித்யஸ்ரீயை அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யஸ்ரீ எலிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் மாயமானதாக அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீஸார் அதுகுறித்தும் விசாரித்து வந்துள்ளனர். ஐடிஐ கல்லூரியில் படித்த ராமு குறித்து உடன் படித்த நண்பர்களிடம் விசாரித்ததில் தற்கொலை செய்து கொண்ட நித்யஸ்ரீயை ராமு ஒருதலையாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதும் வாழவே பிடிக்கவில்லை என்று சொல்லி வந்ததாகவும், தனது கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் நித்யஸ்ரீ உடலை எரிப்பார்களா? புதைப்பார்களா என்றும் ராமு விசாரித்ததும் தெரிய வந்துள்ளது. ராமுவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ என்ற ரீதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் நித்யஸ்ரீயை தகனம் செய்த இடத்தில் ராமுவுன் கடிகாரம் மற்றும் பர்ஸ் ஆகியவை கிடைத்துள்ளது. நித்யஸ்ரீ உடல் எரியூட்டப்பட்டதும் தகனம் செய்பவர்கள் அருகே சாப்பிட சென்றிருந்த நேரத்தில் ராமு தீயில் பாய்ந்து உயிரை விட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து அங்கு இருந்த எலும்புகளை தடவியல் சோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர் போலீஸார். தடவியல் முடிவுகள் வந்த பிறகே ராமு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.