நீட் சட்ட நகலை கொளுத்துவோம்: திருமாவளவன் அறிவிப்பால் பரபரப்பு
வியாழன், 7 செப்டம்பர் 2017 (05:26 IST)
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிக்க முடியாத அரியலூர் அனிதா மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் கட்சி தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் இதுகுறித்த போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “‘நீட்’ ரத்தாகும் அல்லது ஒராண்டுக்கு மட்டுமாவது விலக்கு கிடைக்கும் என்கிற போலியான நம்பிக்கையைத் தமிழக அரசு மாணவர்களிடையே வளர்த்து விட்டது. அதற்கு மத்திய அரசும் இணங்குவது போல நாடகமாடியது. கடைசியில் தமிழக மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டன. எனவே, தமிழகத்துக்குத் துரோகமிழைத்த அரசுகளைக் கண்டித்தும் நீட் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நீட் சட்ட நகல் எரிப்புப் பேராட்டம் நடைபெறுகிறது.
அனிதாவின் குடும்பத்திற்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் ரூ.7 லட்சத்தை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்கொடுமைகள் நிகழ்கிறபோது மத்திய அரசின் சார்பில் சட்டப்படி வழங்கப்படும் இழப்பீடாகும். இதைத்தான் முதல்வர் அறிவித்திருப்பதாக தெரிகிறது. தமிழக அரசின் சார்பில் அந்தக் குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும் என்கிற இரக்கம் தமிழக முதல்வர் அவர்களிடம் இல்லையென்பது வேதனைக்குரியது. இந்த நிதி ஏழு இலட்சத்தையும் வேண்டாம் என்று அனிதா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அரசு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும், அதைப் பெரிதாகக் கருதாமல் அனிதா குடும்பத்தினர் ‘நீட் தேர்வை நடைமுறைப்படுத்தவே கூடாது; முழுமையாக அதை ரத்து செய்ய வேண்டும’; என்று வலியுறுத்துவது வரவேற்கக்கூடியதாகும்.
இந்நிலையில், நீட் தேர்வை இனி எக்காலத்திலும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி, முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் சட்ட நகல் எரிப்புப் பேராட்டத்தில் பங்கேற்கிறார்கள்”
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.