கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேகர் ரெட்டி, தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் உடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 5 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது இல்லத்தை சுற்றி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, மிக முக்கிய நபர் வீட்டில் சோதனை நடத்தும் போது வருமான வரித்துறையினர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம். தமிழக தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இருக்கும் என்பதால் துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.