போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்! என கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பது ஏன்? மதுவும் போதை என்பதை தமிழ்நாடு அரசு மறந்து விட்டதா? டெட்ரா மது விற்பனையை ஊக்கப்படுத்தாமல்,போதை இல்லாத தமிழகத்தை உருவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அனைத்து விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என கூறும் முதல்வர் மு க ஸ்டாலின், டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பது ஏன்? மதுவும் போதை என்பதை இந்த அரசு மறந்து விட்டதா?. போதை என்பது தனி மனிதனின் பிரச்சனை அல்ல, அது ஒரு சமூக பிரச்சனை என கூறி தமிழக மக்களை குழப்புவதோடு அவர்களை ஏமாற்றி வருகிறார் முதல்வர் மு க ஸ்டாலின். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடினால் மட்டுமே போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும். ஒருபுறம் போதை இல்லா தமிழகம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் டெட்ரா மது விற்பனையை ஊக்கப்படுத்தி மக்களை குழப்பாமல், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.