ராம மோகன் ராவின் சவாலுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? - ஸ்டாலின் காட்டம்

சனி, 31 டிசம்பர் 2016 (02:26 IST)
ராம மோகன் ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு மக்களின் சிரமங்களைப் போக்க முயலாமல், வங்கி வரிசைகளில் பசியும் பட்டினியுமாக பல நாட்கள் நின்றதை கண்டு கொள்ளாமல் இருந்ததை மக்கள் நிச்சயம் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

இந்த உயர் மதிப்புடைய பண நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். தமிழக நிர்வாகம் நடக்கும் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திற்குள் மத்திய துணை ராணுவத்தின் துணையுடன் ரெய்டு நடத்தப்பட்டது.

அதற்கு முன்பு மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு செய்யப்பட்டது. சேலம் மற்றும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகள் எல்லாம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மட்டுமா அல்லது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன், யாரைக் காப்பாற்ற இந்த தயக்கம் என்பது எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்