இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்து வந்தாலும், தமிழகத்தில் கடந்த தேர்தலை போலவே பல இடங்களிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகள் பெற்றும் பின் தங்கியுள்ள கட்சிகளில் அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. 39 தொகுதிகளில் 29 தொகுதிகளில் அதிமுக திமுகவுக்கு பின் இரண்டாவது அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 10 தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று பின் தங்கிய கட்சியாக பாஜக உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்த பின்னர் பாஜக பிரமுகர்கள் பலரும் அதிமுகவை விமர்சித்து வந்ததுடன், திமுகவிற்கு அடுத்த தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி பாஜகதான் என்றும் பேசி வந்தனர். பதிலுக்கு அதிமுகவினரும், பாஜகவுக்கு பல இடங்களில் பூத் ஏஜெண்டுக்கு கூட ஆட்கள் கிடையாது என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது வாக்கு சதவீத அடிப்படையில் தமிழ்நாட்டில் அதிமுக தன்னை இரண்டாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்தியுள்ளது.