ஆளுநர்-தினகரன் சந்திப்பில் நடந்தது என்ன?

வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (09:45 IST)
ஆளும் அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சிரித்த முகத்துடன் சந்தித்தார் தினகரன். இதனால் இந்த சந்திப்பின் போது என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 
 
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் அதன் மீது அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில் 16 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் மற்றும் 7 எம்பிக்களுடன் நேற்று ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தினகரன் ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்தார். பின்னர் ஆளுநரிடம் நாங்கள் இந்த ஆட்சியை கலைக்க கோரிக்கை வைக்கவில்லை.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை மட்டும் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என கூறியுள்ளார். அதன் பின்னர் புதிதாக தினகரன் அணியில் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.
 
மேலும் ஜெயா தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு பல இடங்களில் நிறுத்தப்பட்டது குறித்தும் ஆளுநரிடம் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட ஆளுநர் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்