இன்று முதல் மீண்டும் மழை ஆரம்பம்.. 5 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 12 ஜனவரி 2025 (09:06 IST)
வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் மழை இல்லை என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், மீண்டும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, ஜனவரி 13-ஆம் தேதி, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள், அதாவது ஜனவரி 14-ஆம் தேதி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்