அட்டைப் படத்திற்காக விகடனை முடக்குவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்! - உண்மையாகவே முடக்கப்பட்டதா விகடன்?

Prasanth Karthick

ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (09:39 IST)

சமீபத்தில் விகடன் ஊடகத்தில் வெளியிடப்பட்ட அட்டைப்படத்திற்காக மத்திய அரசு விகடன் தளத்தை முடக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் ஊடகத்துறையில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் விகடன் ஊடகம், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி சந்தித்ததையும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டதையும் சித்தரித்து சித்திரம் ஒன்றை அட்டைப்படமாக வெளியிட்டனர்.

 

இது பிரதமரை தரக்குறைவாக சித்தரிப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ALSO READ: ”நான் ஈ என் பேரு.. நான் குட்டிதான் பாரு” - இஸ்ரோ விண்கலத்தில் பயணம் செல்லும் ”பழ ஈக்கள்”!

 

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல. பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையதளத்திற்கு உடனடி அனுமதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்போது விகடன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், தங்களது இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் சிலர் தெரிவித்து வருவதாகவும், ஆனால் தங்கள் இணையதளம் தடை செய்யப்பட்டதாக இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் அட்டைப்படத்திற்காக தங்கள் தளம் முடக்கப்பட்டிருந்தால் இந்த பிரச்சினையை சட்டரீதியாக சந்திக்கவும் தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்