நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இந்த கலந்தாய்வு இறுதிச்சுற்றில் மருத்துவ கல்லூரியில் படிக்க இடங்கள் பெற்றும், கல்லூரியில் சேராத 20 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆறு எம்பிபிஎஸ் இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரியில் நான்கு பிடிஎஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு முடிந்ததால் இந்த இடங்கள் இந்த ஆண்டு முழுவதும் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் மாணவர்கள் சேராததால் தான் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.