தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை அறிவிக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர், கேட்டுக் கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகளை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார்.
அதன்படி, கட்சியின் அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக சதீஷ், தலைமை நிலையச் செயலராக பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலராக அழகாபுரம் ஆ. மோகன்ராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, கடந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.