ஆயுத பூஜைக்கு நடிகர் விஜய் வாழ்த்து சொல்லியதன் மூலம் தனது தவறை திருத்திக் கொண்டதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் பயணத்தை அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் பல்வேறு மதம் சார்ந்த விழாக்களுக்கும் வாழ்த்து செய்தி பகிரும் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததை இந்து அமைப்புகள் சில விமர்சித்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சரஸ்வதி பூஜை, விஜயதசமிக்கு நடிகர் விஜய் வாழ்த்து செய்தி பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி முன்னாளு ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் “இந்து மக்களின் பண்டிகைகளை வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதால் அவர்களது எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதை விஜய் புரிந்து கொண்டுள்ளார். அதனால்தான் சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தீபாவளிக்கும் வாழ்த்து செய்தி பகிர்வார் என எதிர்பார்க்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்” என பேசியுள்ளார்.
மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் “நாங்கள் இப்போதைக்கு கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். கூட்டணி சேர்ப்பது எங்கள் வேலையல்ல. அதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது போல திமுக அரசு தோற்றம் மட்டும் காட்டுகிறது. உதயநிதி சென்று அவசரகால உதவி மையங்களை பார்வையிடுகிறார். ஆனால் இதெல்லாம் விளம்பர யுக்தியாகவே உள்ளன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K