ஹெலிகாப்டர் கேட்கும் பெண்கள் வழிப்பறி கோஷ்டி; விளாசிய இயக்குநர்

வெள்ளி, 24 மார்ச் 2017 (20:00 IST)
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகள், நிலம் வேண்டும் என கேட்டது குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மகள்களும், அம்மாக்களும் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பெற்றோரிடம் இருந்து வீடு, கார், நகைகள், மாப்பிளை ஹெலிகாப்டரில் வர வேண்டும் போன்ற பல கருத்துகளை தெரிவித்தனர்.
 
இதையடுத்து இது சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
சமீபத்திய நீயாநானாவில் வெளியான பெண்களே தங்கள் பெற்றோரிடம் வரதட்சணை கேட்ட நிகழ்ச்சியைப் பார்த்தேன். மகளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிற பெற்றோர்கள் உள்ள குடும்பங்களில் பெண்களின் மனநிலை திருகி போய் கிடக்கிறது.
 
எந்த அறமின்றி தன் பெற்றோரிடம் கொள்ளை அடித்து விட்டு கணவனுடன் சுகமாக செட்டில் ஆகிவிட துடிக்கும் இந்த பெண்களை வழிப்பறி கோஷ்டி என்று சொல்வதுதான் சரி. ஒரு சதவித பெண்களின் கண்ணோட்டம் பொதுநலமின்றி சுயநலம் சார்ந்ததாக உள்ளது என்பது இந்த நிகழ்ச்சியை கண்டால் தெளிவாக புரிகிறது.
 
ஒரு பக்கம் பெண் விடுதலையின் குரல் உயரத்தில் ஒலித்தவண்ணம் உள்ளது. நாளைய பெண்களில் ஒரு சாரார் சுயநலம் பிடித்த கிருமிகளாக விஷ வித்துகளாக வளர்ந்து நிற்கிறார்களா? இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் தான்.
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்