தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொழில்கள் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுபடியாகாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. எனினும் மக்கள் வார அட்டை வழிமுறையை பின்பற்றி கடைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டுகளை கவிழ்த்துவிட்டும் அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.
அன்றாட வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக எண்ணி இவ்வாறு செய்துள்ளனர். அவர்களுக்கு நிலைமையை எடுத்து சொல்லி அவர்களை கடைகளை மூட சொல்லாமல் நகராட்சி ஆணையர் ஒரு ரவுடி போல செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆணையர் கடைகளை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.