அதிமுக பொதுச்செயலாளர் பதவி கேட்கும் வைத்திலிங்கம்?: திவாகரன், சசிகலா ஆசி உள்ளதாம்!

செவ்வாய், 30 மே 2017 (12:14 IST)
அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வர வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவருக்கு சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரது ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக வந்தார். பின்னர் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்ததால் அவரது அக்காள் மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
 
அதன் பின்னர் அதிமுக தினகரனின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் தற்போது தினகரனும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறையில் உள்ளார். இதனால் அதிமுகவில் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆகியவை காலியாக உள்ளது.
 
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்த இணைப்பு நடைபெறாமல் இருப்பதற்கு வெளியில் இரு தரப்பினரும் ஆயிரம் காரணம் கூறினாலும் இதற்கு தடையாக இருப்பது பொதுச்செயலாளர் பதவியையும், முதல்வர் பதவியையும் யாருக்கு என்ற கேள்வி தான்.
 
இதில் இரு தரப்புக்கு உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை நடைபெறாமலே உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் கேட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. வைத்திலிங்கத்துக்கு சசிகலா மற்றும் திவாகரன் ஆகிய இருவரின் ஆசியும் உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்