ஈரோடு கிழக்கு தொகுதியில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை போட்டு காட்டி மக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர் என அதிமுக குற்றம் சாட்டி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு திமுக கூட்டணி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தேமுதிக வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகிய அவர்களும் களத்தில் உள்ளனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக ஓட்டுவேட்டை நடத்த உள்ளார். இந்த நிலையில் திமுகவினர் பணம் சப்ளை செய்வதாகவும் பொருட்களை கொடுப்பதாகவும் மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறிய போது ஈரோடு கிழக்கு தொகுதியில் துணிவு, வாரிசு உள்ளிட்ட படங்களை போட்டு காட்டி மக்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆடு மாடுகளை பட்டியலில் அடைப்பது போல ஒட்டுமொத்தமாக வாக்காளர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளது பெரும் கொடுமையானது என்று வைகை செல்வன் தெரிவித்து உள்ளார்.