அசராத தேமுதிக ! அரவணைக்கும் அதிமுக ! என்னாச்சு கூட்டணி ?
வியாழன், 7 மார்ச் 2019 (16:29 IST)
திமுகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் துரைமுருகன் அரசியல் நாகரிகமற்று நடந்துகொள்கிறார் எனவும் தேமுதிக துணை செயளாளர் சுதீஷ் கூறியயிருந்தார்.
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே நீடித்து வரும் நிலையில் கடைசியாக 4 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என அதிமுக கூறிவிட்டது.
இந்நிலையில் நேற்று தேமுதிக சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில் ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாக சொன்னார்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேச சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
முதலில் அதிமுக உடன் சில மனக்கசப்புகள் இருந்தபோது திமுக எங்களுக்கு அழைப்பு விடுத்தது. துரைமுருகனிடம் போனில் பேசியது உண்மைதான், ஆனால் நேற்று பேசவில்லை 10 நாட்களுக்கு முன்னர் பேசினேன். ஒரே ஊர்காரர் அதனால் பல விஷயங்கள் குறித்து பேசுவோம்.
அதுபோக துரைமுருகன் திமுக பற்றி நிறைய தன்னிடம் புலம்பியதாகவும், அதை பற்றி வெளியே சொன்னால் நன்றாக இருக்காது எனவும் கூறினார்.
கேப்டன் வளர்ப்பில், வழியில் வந்த நாங்கள் அரசியல் நாகரிகம் கருதி சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லவில்லை ஆனால் துரைமுருகனுக்கோ அந்த நாகரிகமெல்லாம் இல்லை அவரது வளர்ப்பு அந்த மாதிரி என காட்டமாக பேசினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் இது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேமுதிகவிடன் திமுக இவ்விதம் நடந்து கொண்டதுதான் அரசியல் நாகரீகம் இல்லாமல் உள்ளது. அதேபோல் தேமுதிகவை அவமரியாதை அளிக்கும் விதத்தில் துரைமுருகன் பேசி இருக்கக்கூடாது. அதிமுக கூட்டணியில் 40 விமானப் பயண டிக்கெட்டுகள் டெல்லிக்கு எடுத்தாயிற்று. அதற்கு போர்டிங் பாஸ் ஒன்றுதான் மீதமுள்ளது. அதைப்பெற தேமுதிக வந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.