பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: தடா போட்ட உதயநிதி!!

புதன், 25 நவம்பர் 2020 (08:41 IST)
உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
அவர் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்வரும் நவம்பர் 27ஆம் தேதி எனது பிறந்த நாளை கொண்டாடத் தமிழகம் முழுவதும் இளைஞரணியினர் உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் தயாராகி வருகிறீர்கள். என் மீதுள்ள உங்களின் மாசற்ற அன்பை நான் அறிவேன். 
 
இதற்கிடையே வங்கக் கடலில் நிவர் என்னும் புயல் உருவாகி அது தமிழகம் - புதுவை கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மைய அறிவுறுத்தலின் பேரில் சில மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
 
நாம் ஏற்கனவே சந்தித்த கஜா, ஒக்கி, வர்தா, தானே போலவே இந்த புயலும் பேரிடரை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இது பேரிடர் காலம். மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அரசின் கையாலாகாத்தனத்தை கண்டு சலித்துப்போன பொதுமக்கள், 'ஒரு வேளை அசம்பாவிதங்கள் நடந்தால் யார் உதவிக்கரம் நீட்டுவர்? யார் நம்மைக் காக்க வருவர்? எனத் தவிப்பில் உள்ளனர். அதற்கான பதிலை நம் கழகத் தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார்.
நம்முடைய கழகத்தினர் மீட்புப் பணி, நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டுள்ளார். இளைஞரணி நிர்வாகிகள், தம்பிமார்கள், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அசாதாரண சூழல்கள் எழுந்தபோதெல்லாம் களத்தில் நின்று மக்கள் துயர் துடைத்திருக்கிறோம். 
 
எனவே, இந்த இக்கட்டான நேரத்திலும் நாம் உதவிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், நிவாரணப் பணிகள் செய்வதும் தான் உண்மையான கொண்டாட்டம். இதுதான் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் நமக்குக் கற்றுத்தந்த பாடம். 
 
எனவே இதை மனதிற்கொண்டு, எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆடம்பர பேனர்கள் வைப்பது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்த்து, கனமழை பெய்யும் இடங்கள் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இளைஞரணியினர் நிவாரணம் - மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்