ஆகாயத்தில் இருந்து விழுந்த மர்ம பொருட்கள் : விண்ணில் இருந்த ஏவப்பட்டனவா?
வியாழன், 3 நவம்பர் 2016 (12:09 IST)
ஆகாயத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருட்கள் விழுந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மோதுப்பட்டி எனும் கிராமத்தில் வசிப்பவர் வேலுச்சாமி. அவரது தோட்டத்தில் நேற்று மாலை வானத்திலிருந்து ஏதோ ஒரு மர்ம பொருள் பெரிய சத்ததுடன் விழுந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
கருப்பு நிற ஒயர்கள் சுற்றப்பட்டு, பார்ப்பதற்கு ஒரு அலுமினிய சிலிண்டர் வடிவில் இருந்த அப்பொருளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அதேபோல், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வானத்திலிருந்து ஒரு மர்ம பொருள், பயங்கர சத்தத்துடன் வேப்ப மரத்தின் மீது விழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி அருகே உள்ள கொளந்தபாளையம் எனும் கிராமத்தில் நேற்று காலை 10.30 மணியளவில், வானத்திலிருந்து ஒரு மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் கீழ் நோக்கி, ஒரு டீக்கடை அருகிலிருந்த, ஒரு வேப்ப மரத்தின் மீது விழுந்தது.
இதைக் கண்ட அந்த கிராம மக்கள் ஓடி வந்து என்னவென்று பார்த்தனர். நீளவடிவில் ஏறக்குறைய 10 கிலோ எடையில் இரும்பாலான பொருள் போல அது இருந்தது. அது பறக்கும் தட்டாக இருக்குமோ அல்லது விமானத்தில் இருந்து உடைந்த ஏதோ ஒரு பொருளா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில், அடுத்தடுத்து விழுந்த இந்த மர்ம பொருட்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.