கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதிமுக வில் சிலகாலம் அமைச்சராகவும் செயல்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல் பிரச்சனைகளால் டிடிவி தின்கரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அவருக்கு வலதுகைப் போல செயல்பட்டார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு எதிராக வந்ததில் இருந்து இவர் தினகரன் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் இவர் அமமுக வில் இருந்து விலகி திமுக வில் இணைய இருக்கிறார். இன்று அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி திமுக வில் இணைய இருப்பதற்குப் பின்புலத்தில் திமுக வை சேர்ந்த இருவர் முக்கியக் காரணமாக விளங்கினர் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. திமுக வின் முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட செயலாளருமான கே. என். நேருவே முதன் முதலில் செந்தில் பாலாஜியிடம் பேசி திமுக வில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறார். அதன் பின் இந்த செய்தி நேரு மூலமாக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் காதுகளுக்கு சென்றுள்ளது. அவர் மூலம் விஷயத்தை அறிந்த ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் அளித்த பின் இப்போது இணைப்பு இன்று நடக்க இருப்பதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியுடன் இன்னும் சிலரும் திமுக வில் இணைய இருப்பதாக தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு திமுக வில் முக்கியப் பொறுப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.