பணப்பட்டுவாடாவை தடுத்த திமுகவினருக்கு கத்திக் குத்து - ஆர்.கே.நகரில் களோபரம்

புதன், 5 ஏப்ரல் 2017 (13:23 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது. மேலும், அதை தடுக்க நினைத்த திமுகவினர் இருவருக்கு கத்திக் குத்தும் விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் வசிக்கும் மக்களுக்கு தலைக்கு ரூ.5 ஆயிரம் வரை தினகரனின் ஆட்கள் பணம் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவர்கள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். மேலும், பணத்தை  கொடுத்து விட்டு அவர்களிடம் தொப்பி சின்னத்தில்தான் வாக்களிப்போம் என சத்தியமும் வாங்கப்படுகிறது என எதிர்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். மேலும், பணம் கொடுத்தால் மட்டிக் கொள்வோம் என பரிசுப் பொருட்களாகவும் கொடுத்து வருகிறார்கள் எனத் தெரிகிறது.
 
அதேபோல், பணம் கொடுத்ததற்கு அடையாளமாக வீட்டிற்கு வெளியே சில மறைமுக குறிகளையும் பணம் கொடுப்பவர்கள் இட்டு செல்கின்றனர். இது தொடர்பாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளன.
 
இந்நிலையில்  நேற்று அதிகாலை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனின் ஆட்கள் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்களை வினியோகம்  செய்து கொண்டிருந்த போது, அங்கு அந்த திமுக மாணவர் அணியை சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் முகமது அஸ்லாம் ஆகியோர் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். 
 
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தினகரனின் ஆட்கள் அவர்கள் இருவரையும் கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
 
இந்த விவகாரம் திமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்