இனியாவது பழனிசாமி அரசு இதை நிறுத்த வேண்டும்: டிடிவி!

சனி, 10 அக்டோபர் 2020 (13:12 IST)
தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ரூ.2,650 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்தற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650  கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது. 
 
இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை  அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு.
 
குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்