தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் திவாகரன் பற்றி தெரிவித்த கருத்துகள் மன்னார் குடி குடும்பத்தினருக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து வெற்றிவேலுக்கு எதிராக திவாகரனின் மகன் ஜெயானந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். உடனடியாக இந்த விஷயத்தில் தினகரனும், திவாகரனும் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “இனிமேல் தினகரனுடன் இணைந்து செயல்பட போவதில்லை. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே, அம்மா அணி என்கிற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலிலில் போட்டியிடுவோம். அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என தினகரன் நினைக்கிறார். கட்சி உறுப்பினர்களை கேட்காமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்” என திவாகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்ரு திவாகரன் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை அவர் என் மீது காட்டுகிறார்” என தினகரன் பதிலளித்தார்.