இடைத்தேர்தலா? உச்ச நீதிமன்றமா? குழப்பத்தில் தினகரன் : அப்செட்டில் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (11:48 IST)
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மதுரையில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை செய்து வருகிறார்.

 
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.  சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 
 
இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 
 
தினகரனுக்கு தற்போது 3 வழிகள் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் அல்லது இடைத்தேர்தலை சந்திக்கலாம். மூன்றாவதாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டே இடைத்தேர்தலையும் சந்திக்கலாம் என அவரின் வழக்கறிஞர் நேற்று கூறியிருந்தார்.

 
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், தீர்ப்பு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். அப்படியே தீர்ப்பு வந்தாலும், அது தினகரன் தரப்பினருக்கு சாதகமாக அமையும் எனக்கூற முடியாது. அதோடு தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டால் சிக்கல் ஆகிவிடும். எனவே, தினகரன் மற்றும் அவரின் 18 எம்.எல்.ஏக்களும் கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
 
தீர்ப்பு எப்படியும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என தினகரனுன் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தனர். பேட்டிகளில் இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என கூறினாலும், தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சுலபமான காரியம் அல்ல என்பதை தினகரன் உணர்ந்துள்ளார். 18 எம்.எல்.ஏக்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றனர். 
 
ஆனால், தற்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். தேர்தல் செலவுகளை சமாளிக்க வேண்டும். களத்தில் அதிமுக, திமுக பணத்த இறக்கி விளையாடுவார்கள். அவர்களுக்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளை பெறுவது சாதாரண காரியம் அல்ல. மோசமாக தோற்றுவிட்டால், தினகரன் கட்சி அவ்வளவுதான் என முத்திரை குத்தி விடுவார்கள். இவை அனைத்தையும் தினகரன் உணர்ந்துள்ளார்.
 
அதோடு, நேற்று தீர்ப்பை கேட்டவுடன் “இனிமே அவ்வளவுதான். பதவியும் போச்சு.. நம்பி வந்ததற்கு எல்லாம் போச்சு” என விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் புலம்பியதாககவும், அதில், சிலர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் செய்திகள் வெளியே கசிந்துள்ளது.
 
எனவேதான், நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்றார் தினகரன். குற்றாலத்தில் இருந்த எம்.எல்.ஏக்களும் மதுரை வந்தனர். இன்றும் தினகரன் எம்.எல்.ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். 
 
ஆலோசனைகு பின் செய்தியாளர்களை தினகரன் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்