கோயம்பேடு மார்க்கெட்டை மட்டும் திறக்குறீங்க? – போராட்டம் நடத்திய காந்தி மார்க்கெட் வியாபாரிகள்!

புதன், 2 செப்டம்பர் 2020 (17:14 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது போல திருச்சி காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டுமென வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதியில் திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக பொன்மலை ஜி கார்னரில் உள்ள ஹெலிபேட் தளத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு மார்க்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. எனினும் மழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொருட்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல திருச்சி காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு போக்குவரத்து அனுமதியும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காந்தி மார்க்கெட் திறக்கப்படாதது வியாபாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திடீரென திருச்சி காந்தி மார்கெட் முன்பு கூடிய வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு உடனடியாக விரைந்த போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீஸார் 32 பேரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்