சென்னை ஃபார்முலா கார் பந்தயம் செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்.. முழு விவரங்கள்..!

Siva

சனி, 31 ஆகஸ்ட் 2024 (07:17 IST)
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி Paytm Insider-ல் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தி பயணிகள் மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்விற்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யுங்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31, 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1, 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடைபெற உள்ளது. 
 
தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது,
 
"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ் பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
 
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
 
Paytm இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்