ரயில் கொள்ளை சினிமா காட்சியை மிஞ்சிவிட்டது : விஜயகாந்த்

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:31 IST)
சேலத்திலிருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்படும்போது பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சிவிட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘’ரிசர்வ் வங்கியின் பணத்தை சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும்போது, அதன் மேற்கூரையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச் சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. இது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வாகும். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, தங்கச் சங்கிலி பறிப்புகள் என்று தொடர்ந்த வண்ணம் இருக்கையில், இந்த ரயில் கொள்ளை மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபோன்ற சம்பவம் இதுவரை தமிழகத்தில் நடைபெற்றதில்லை. குற்றம் குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், மிகப்பெரிய சதியோடு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
இதற்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், மதுப்பழக்கம், தமிழகத்தில் அதிக அளவில் வேறு மாநிலத்தவர்களைப் பணியில் அமர்த்துவதுதான் காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, கொள்ளையர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்