வணிகர்களின் இன்னல்களுக்கு மனிதாபிமானத்தோடு தீர்வுகாண வேண்டும்: மு.க.ஸ்டாலின்

செவ்வாய், 5 மே 2015 (07:11 IST)
வணிகர்களின் இன்னல்களுக்கு மனிதாபிமானத்தோடு அரசு தீர்வு காண வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித்தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும் சேர்த்து கட்ட வேண்டுமென்று வணிகவரித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கு எதிராக வணிகர்கள் அளிக்கும் பதிலை ஏற்க மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
 
வணிகர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், 25 சதவிகிதத் தொகையினை முன் கூட்டியே செலுத்த வேண்டிய சங்கடமானநிலை மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின்படி இருந்து வருகிறது. அப்படிமேல் முறையீடு செய்யும் வணிகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடி, தொழிலை கைவிட்டு விட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிறார்கள்.
 
மேல்முறையீட்டு செய்யும் வணிகர்கள் 25 சதவிதத் தொகையை முன் கூட்டியே செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டும், அதன்படி வணிகர்களின் நலன்கருதி, அரசு இதுவரை பரிவோடு பரிசீலனை செய்யவில்லை.
 
வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கற்பனையான காரணங்களைக் காட்டி வரி விதிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
 
இயற்கை நீதிக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும், வணிகர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையும், தமிழக அரசு அனுசரணையோடு ஆய்வு செய்து, வணிகவரித்துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்